கொலம்பியா: அமேசான் காடுகளில் சிக்கிய குழந்தைகள் 40 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழக்கும் முன்பு அவர்களின் தாய் என்ன செய்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகப் புகழ் பெற்ற அமேசான் காடு தென் அமெரிக்காவில் அமைந்துள்ளது. பிரேசில், கொலம்பியா என பல்வேறு நாடுகளில் இந்த அமேசான் காடு பரவியுள்ளது.. இதற்கிடையே அமேசான் காட்டின் மீது கடந்த மே 1ஆம் தேதி பயணித்த ஒரு குட்டி விமானம் எதிர்பார்க்காத வகையில் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 4 குழந்தைகள் மட்டும் தப்பிப் பிழைத்தனர். விமானி, குழந்தைகளின் தாய் மற்றும் மற்றொரு நபர் விபத்தில் உயிரிழந்தனர். குழந்தைகள் உயிருடன் இருப்பது தெரிந்த உடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
குழந்தைகள் மீட்பு: சுமார் 40 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின் குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர். பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த அந்த குழந்தைகளுக்குச் சின்ன வயதில் இருந்தே காடு குறித்து அவர்களின் பெற்றோர் சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளனர். இதனால் அங்குள்ள சாப்பிடக் கூடிய செடி, விதைகளைச் சரியாகக் கண்டறிந்து அதைச் சாப்பிட்டே இந்த சிறுவர்கள் 40 நாட்கள் உயிருடன் இருந்துள்ளனர். இதற்கிடையே இது குறித்து இப்போது கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
40 நாள் போராட்டத்திற்குப் பிறகு குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் சொன்ன முதல் விஷயம் என்ன தெரியுமா.. தேடுதல் வேட்டையில் இறங்கிய குழுவைக் கண்டறிந்ததும், “என் அம்மா இறந்துவிட்டார்”. ”எனக்குப் பசிக்கிறது” என்றே அந்த குழந்தைகள் கூறியுள்ளனர்.
ஹுய்டோட்டோ பழங்குடி இனத்தைச் சேர்ந்த அந்த குழந்தைகளின் வயது- 13, ஒன்பது, ஐந்து மற்றும் ஒன்று ஆகும். சில நாட்களுக்கு முன்பு அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் மூலம் அவர்கள் வெளியே அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். இந்த குழந்தைகளை முதலில் கண்டறிந்த போது, அங்கே என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோர் பகிர்ந்துள்ளனர்.
அம்மா இறந்துவிட்டார்: இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “நாங்கள் அவர்களைக் கண்டுபிடித்ததும் மூத்த மகள் லெஸ்லி, கைகளில் குழந்தையுடன் என்னை நோக்கி ஓடி வந்தார். எனக்குப் பசிக்கிறது என்று லெஸ்லி கூறினார். அந்த நிலையிலும் அவர் தனது தம்பிகளைப் பாதுகாக்கத் தவறவே இல்லை. அங்கே படுக்கை போன்ற ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். அங்கே தான் இரு சிறுவர்கள் படுத்து இருந்தார்கள்.
அந்த சிறுவன் என் அம்மா இறந்துவிட்டார் எனச் சொல்லி விம்மத் தொடங்கினான். நாங்கள் உடனடியாக அவர்களுக்கு நம்பிக்கையூட்டினோம். இதெல்லாம் ஒன்றும் இல்லை சரியாகிவிட்டது. உடனடியாக இங்கிருந்து கிளம்பப் போகிறோம் என்றெல்லாம் சொல்லி நம்பிக்கையூட்டினோம்” என்றனர். இப்போது அந்த குழந்தைகள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரராகுவாரா என்று அடர்ந்த அமேசான் பகுதியில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே என்ஜின் பிரச்சனை ஏற்பட்டு, விமானம் அங்கு மோதி விபத்தில் சிக்கியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் விமானி, குழந்தைகளின் தாய் மற்றும் மற்றொரு நபரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விமானம் காட்டில் செங்குத்தாகப் பாய்ந்துள்ளதும் தெரிய வந்தது.
இதுதான் தாய்ப் பாசம்: இதற்கிடையே குழந்தைகளின் தந்தை பேசுகையில், “என்னால் ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்ல முடியும். மே 1 விபத்தில் அவரது மனைவி பலத்த காயம் அடைந்தாலும் உயிரிழக்கவில்லை.. நான்கு நாட்களுக்கு பிறகே அவர் உயிரிழந்தார்.. அவர் உயிரிழக்கும் போது குழந்தைகளும் உடன் இருந்துள்ளனர்.
உயிரிழக்கும் முன்பு குழந்தைகளைப் பார்த்து, “நீங்கள் இங்கிருந்து சென்றுவிடுங்கள். உங்கள் அப்பா உங்களுக்காகக் காத்திருப்பார். அவர் எவ்வளவு நல்ல மனிதர் என்பதை இனி நீங்கள் உணரப் போகிறீர்கள்.. நான் காட்டிய பாசத்தையும் அன்பையும் இனி அவர் உங்களுக்குக் காட்டுவார் என்றுள்ளார். மேலும், குழந்தைகள் காட்டில் உயிர் பிழைக்கவும் நம்பிக்கையூட்டிள்ளார்” என்று குழந்தைகளின் தந்தை தெரிவித்தார்.
இந்த 40 நாட்கள் அந்த குழந்தைகள் அங்கிருந்த செடி, பழங்கள் மட்டும் விதைகளை மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்துள்ளனர்.