பொகோடோ: தென் அமெரிக்காவில் உள்ளது அடர்ந்த அமேசான் மழைக்காடு. ஆண்டின் பெரும்பாலான பகுதி இங்கு கடும் மழை இருக்கும். இந்த காடு பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா உட்பட பல நாடுகளில் விரிந்து கிடக்கிறது.
இந்நிலையில், கொலம்பியா நாட்டின் அமேசான் வனப்பகுதியில் இருந்து ஒரு தம்பதி 11 மாத குழந்தை உட்பட 4 மகன்களுடன் விமானத்தில் சன் ஜோஷி டி கவ்ரி என்ற நகருக்கு கடந்த மே மாதம் 1-ம் தேதி சென்றனர்.
அமேசான் காட்டுப் பகுதிக்கு மேலே சிறிய ரக விமானம் பறந்து சென்ற போது திடீரென விபத்தில் சிக்கி விழுந்து நொறுங்கியது. இதில் பைலட் மற்றும் அந்த தம்பதி உயிரிழந்தனர். ஆனால், 11 மாத குழந்தை மற்றும் 13, 9 வயது, 4 வயதுள்ள சிறுவர்கள் என 4 பேர் நிலை தெரியவில்லை.
விமானம் விபத்துக்குள்ளான தகவல் அறிந்த கொலம்பிய அரசு உடனடியாக மோப்ப நாய்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை மீட்புப் பணியில் ஈடுபடுத்தியது. அவர்களுடன் உள்ளூர் பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது இரண்டு வாரங்கள் கழித்து விமானத்தின் நொறுங்கிய பகுதிகள் இருக்கும் இடம் மற்றும் பைலட் உட்பட 3 பேரின் உடல்களை மீட்புப் படையினர் கண்டெடுத்தனர்.
இதற்கிடையில் விமானம் விபத்துக்கு உள்ளான பகுதியில் ஹெலிகாப்டர்களில் இருந்து உணவு பொட்டலங்களை வீசினர். தவிர சிறுவர்களின் தாத்தா, பாட்டி சொல்லி அனுப்பிய தகவலையும் ஹெலிகாப்டரில் இருந்து ஒலிபரப்பினர். காட்டுக்குள் எப்படி உயிர் வாழ வேண்டும், காயம் அடைந்திருந்தால் எப்படி இலை, தழைகளை வைத்து மருந்து போடுவது, பூச்சி கடியில் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும், மழைக் காடுகளில் எப்படி உயிர் வாழ்வது போன்ற இயற்கையுடன் இணைந்து வாழும் கலைகளை தாத்தா, பாட்டி இருவரும் அந்த சிறுவர்களுக்கு கற்றுத் தந்துள்ளனர்.
மேலும் காட்டுக்குள் அனைவரும் ஒரே இடத்தில் இருங்கள் என்று பாட்டி சொன்ன தகவலை மீண்டும் மீண்டும் ஹெலிகாப்டரில் இருந்து ஒலிபரப்பி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் பலனாக 40 நாட்கள் கழித்து 11 மாத குழந்தை உட்பட 4 சகோதரர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர். தற்போது 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் மீட்கப்பட்ட தகவல் அறிந்து அதிபர் கஸ்டவோ பெட்ரோ மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். ‘‘அவர்கள் தற்போது கொலம்பிய குழந்தைகள், இயற்கையின் குழந்தைகள்’’ என்று அவர் அறிவித்துள்ளார்.
அடர்ந்த காட்டுப் பகுதிக்குள், அதுவும் அமேசான் காட்டுக்குள் எப்படி 4 சிறுவர்களும் 40 நாட்கள்உயிருடன் இருந்தார்கள் என்பதுதான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்தத் தகவல் இப்போது வைரலாகி உள்ளது. உயிர் பிழைத்த சிறுவர்கள் ஹுய்டோடோ என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.
அதனால், அவர்களுக்கு இயல்பாகவே இயற்கையுடன் வாழ்வது எப்படி என்ற நுணுக்கங்கள் தெரிந்திருக்கிறது. மேலும், நொறுங்கி விழுந்த விமானத்தில் இருந்த மரவள்ளிக் கிழங்கு பவுடர், காட்டு விதைகள், வேர்களை 40 நாட்கள் உண்டு அந்த சிறுவர்கள் உயிர் வாழ்ந்துள்ளனர்.