இலங்கையின் குடிநீர் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை….

இலங்கையில் நிலத்தடி நீரின் தரம் குறைவடைந்துள்ளதால் மக்களுக்கு சுகாதார ரீதியில் ஏற்படும் பாதிப்புகளை இனங்கண்டுகொள்வதற்கான ஆய்வு நடவடிக்கையை பரந்தளவில் மேற்கொள்வது தொடர்பிலும், அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐ.நாவின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் கீழ் நாட்டில் நீர் மற்றும் சுகாதாரத்தை உகந்த மட்டத்தில் பேணுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் தேசிய முயற்சியை வலுப்படுத்துவதற்கு, அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்குடன், சீன ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞான அகாடமியால் நாட்டில் பல விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடலான்று, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நீர் வழங்கல் சபையின் புதிய கட்டிடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில், சிறப்பு அதிதிகளாக சீன ஆராய்ச்சி மற்றும் அறிவியல் அகாடமி பேராசிரியர் Min Yang, பேராசிரியர் Wei Yuansong , பேராசிரியர் Yawei Wang உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இலங்கையில் குடிநீரின் தரத்தை மேம்படுத்துவதற்காக உலகின் அதியுயர் தொழில்நுட்பத்தை வழங்கி, அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வுக் கூடங்கள், புதிய ஆராய்ச்சி சாதனங்கள், சுத்திகரிப்பு இயந்திரங்கள் போன்ற இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்ற சீனாவின் நடவடிக்கைக்கு அரசின் சார்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

மேலும், சீன – இலங்கை கூட்டு நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் எமது நாட்டில் நீர் வழங்கல் மற்றும் நிலத்தடி நீர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆராய்ச்சிக்கு அரசாங்கம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் குடிநீரின் தரத்தை மேம்படுத்தல் மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைக்கு இலங்கை மக்கள் சார்பில்; அமைச்சர் சீனாவுக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.