மும்பை: இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு சடத்திற்கு எதிரானது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பாஜகவுக்கு மாற்றுக்கருத்து நீடித்து வருகிறது. இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்பதுதான் தற்போது பாஜகவின் நிலைப்பாடு. கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு இருந்த 4% தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது பாஜகதான். சாதி அடிப்படையில்தான் இடஒதுக்கீடு இருக்க வேண்டுமே தவிர மத அடிப்படையில் இருக்கக்கூடாது என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவில், காங்கிரஸ் கட்சி கடந்த காலத்தில் இஸ்லாமியர்களுக்கு 2B என்ற தனி உள் இட ஒதுக்கீட்டுப் பிரிவை உருவாக்கியது. இதன் மூலம் இந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு 4% தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இருப்பினும் பாஜக இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இடஒதுக்கீடு ஒதுதலைப்பட்சமாக இருக்கிறது என்று பாஜக விமர்சித்து வந்தது. இதனையடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பாஜக இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்தது.
மட்டுமல்லாது இந்த 4% இடஒதுக்கீட்டை ஒக்கலிகா, லிங்காயத் சமுதாய மக்களுக்கு சமமாக பிரித்து கொடுத்தது. தற்போது இந்த இடஒதுக்கீடு ரத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ள நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதே கருத்தை கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிராவின் நாந்தேட்டில் நடைபெற்ற சாதனை விளக்க பேரணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், “மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்கக்கூடாது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆனால் சிலர் இந்த இடஒதுக்கீட்டை ஆதரிக்கின்றனர். உத்தவ் தாக்ரே இது குறித்து விளக்கமளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அவர்களின் நிலைப்பாட்டை உறுதியாக கூற வேண்டும்.
இந்த விவகாரத்தில் மட்டுமல்ல, இந்துக்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் பல்வேறு விவகாரங்களில் உத்தவ் தாக்ரேவுக்கு மாற்று கருத்து இருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதாக இருக்கட்டும், முத்தலாக் விவகாரமாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் உத்தவ் தாக்ரேவுக்கு எதிர்மறையான கருத்துக்கள் இருக்கின்றன. அதேபோல வரலாற்றின் பக்கங்களிலிருந்து சாவர்க்கரின் பெயரை நீக்க சிவசேனா விரும்புகிறது.
உத்தவ் தாக்ரேவின் அரசியல் அலுத்துப்போனதால் சிவசேனாவின் பெரும்பான்மை பகுதி எங்களிடம் வந்தது. எங்களிடம் வந்த உறுப்பினர்தான் கட்சியின் உண்மையான விசுவாசிகள். எனவே இவர்களுக்குதான் கட்சியின் சின்னமான வில் அம்பு கிடைத்திருக்கிறது. இவர்கள்தான் உண்மையான சிவசேனா” என்று கூறியுள்ளார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை அள்ள இதுபோன்ற வெறுக்கத்தக்க பேச்சுகளை அமித்ஷா பேசி வருவதாக உத்தவ் தாக்ரே தரப்பினர் விமர்சித்துள்ளனர்.