காஞ்சிபுரத்தில் பாஜக மாவட்ட செயலாளர் செல்வம், போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்களை, தீவிரமாக கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கையில் சைபர் க்ரைம் போலீஸார் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில், காஞ்சிபுரம் பாஜக மாவட்ட செயலாளர் செல்வம் ஒரு போலி வீடியோவை பதித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த வீடியோ வெளிநாடு ஒன்றின் மசூதியில் உள்ள உண்டியல் பணம் எடுக்கும் காட்சிகள் அடங்கி இருந்தன.
ஆனால், பாஜக நிர்வாகி செல்வம், “இந்து கோவில்களின் உண்டியல் பணம் மட்டும் அரசுக்கு சொந்தம், இஸ்லாமிய மசூதிகளின் பணம் இஸ்லாமியர்களுக்கே சொந்தமா? ஆண்டவா தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து வாலாஜாபாத் முபாரக் பாஷா என்பவர் அளித்த புகாரின் பேரில், காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர், பாஜக நிர்வாகி செல்வத்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.