சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியின் மோசமான தோல்வியை அடுத்து முக்கியமான டாப் வீரர்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து உள்ளது. முதல் இரண்டு நாள் ஆட்டத்தில் ஸ்மித், ஹெட் இருவரும் அதிரடியாக சதம் அடித்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டிற்கு 469 ரன்களை எடுத்தது.
26 பந்துக்கு 15 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார். 15 பந்துக்கு 13 ரன்கள் எடுத்து சுப்மான் கில் அவுட் ஆனார். 25 பந்துக்கு 14 ரன்கள் எடுத்து புஜாரா அவுட் ஆனார். 31 பந்துக்கு 14 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய ஜடேஜா 51 பந்தில் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முதல் இன்னிங்சில் ரஹானே 89, ஜடேஜா 48, ஷரத்துல் 51 ரன்கள் எடுக்க இந்திய அணி 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து மீண்டும் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டர் சரிய லபுசேன் 41 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஸ்டார்க் 41, கேரி 66 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணி 270-8 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா 445 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் ரோஹித் சிறப்பான தொடக்கம் கொடுக்க 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தவறாக அவுட் கொடுக்கப்பட்ட கில் 18, புஜாரா 27 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து இறங்கிய கோலி 49 ரன்கள், ரஹானே 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். கடைசியில் வரிசையாக இந்தியாவின் டெயில் பேட்டிங் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க.. இந்தியா தோல்வி அடைந்தது.
இரண்டாவது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து உள்ளது. கடந்த முறை நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து உள்ளது.
விமர்சனம்: இந்திய அணியின் தோல்வியை முன்னாள் வீரர்களும் பலரும் அணியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கண்டிப்பான முடிவுகளை இந்திய அணி எடுக்க வேண்டும் என்று கவாஸ்கர் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், ரோஹித், விராட் கோலி, ரஹானே, புஜாரா போன்ற வீரர்கள் எத்தனை ஆண்டுகளாக விளையாடி வருகிறார்கள்? அத்தனை அனுபவத்திற்கு பிறகும், டி20 தொடரில் விளையாடிவிட்டு வருவதால், டி20 போட்டிக்கு ஏற்ற ஷாட்களை அடித்து அவுட்டானார்கள் என சாக்குப்போக்கு சொன்னால், எந்த காலத்திலும் நீங்கள் கோப்பையை வெல்ல முடியாது.
என்ன தவறு நடந்தது என்பதை ஆராய்ந்து, கண்டிப்பான முடிவுகளை இந்திய அணி நிர்வாகம் எடுக்க வேண்டும்; அதை செய்யத் தவறினால், ஆசிய கோப்பை தவிர்த்து, வேறு எந்த கோப்பையையும் கடைசி வரை இந்திய அணி வெல்லாது, என்று இந்திய அணியின் தோல்விக்கு பிறகு இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
தூக்கப்படுகிறார்கள்: இந்திய டெஸ்ட் அணியில் மோசமாக ஆடி வரும் ரோஹித், கோலி, புஜாரா இதனால் நீக்கப்படுகிறார்களோ என்ற கேள்வி இதனால் எழுந்துள்ளது. உதாரணமாக புஜாரா கடைசியாக ஆடிய 5 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 154 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 25.66 என்ற ஆவரேஜில் ஆடி உள்ளார். 1 அரை சதம் அடித்த இவர் சதம் எதையும் அடிக்கவில்லை.
கோலி இன்னொரு பக்கம் கடந்த 5 போட்டிகளில் ஒரே ஒரு சதம் அடித்துள்ளார். அரை சதம் அடிக்கவில்லை. இவர் 5 போட்டிகளில் 311 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். 44.42 சராசரி என்ற அளவில் மட்டுமே ஆடி உள்ளார்.
அதேபோல் தொடக்க வீரராக தொடர்ந்து ரோஹித் சர்மாவும் 25 ஆவரேஜில் சொதப்பி வருகிறார். இதனால் முக்கியமான டாப் வீரர்களான ரோஹித், கோலி, புஜாராவை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.