மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு தொடர்பாக புனேவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “கொலை மிரட்டல் குற்றம் சாட்டப்படுள்ள சாகர் பார்வே தனியார் நிறுவனம் ஒன்றில் டேட்டா ஃபீடிங் மற்றும் அனாலிட்டிக் பிரிவில் வேலை செய்துவருகிறார். இந்தக் கொலை மிரட்டல் வழக்கினை விசாரித்து வந்த மும்பை போலீஸார் பார்வேவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 14-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முகநூலில் சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்த சாகர் பார்வே, அதற்காக இரண்டு போலியான கணக்குகளை உருவாக்கியுள்ளார். முதல் கட்ட விசாரணையில் அவருக்கு எந்த அமைப்புடனும் தொடர்பில்லை எனத் தெரியவந்துள்ளது” என்று தெரிவித்தனர்.
முன்னதாக, பார்வே நர்மதாபாய் பட்வர்தன் என்ற முகநூல் கணக்கில் இருந்து பவாருக்கு மிரட்டல் விடுத்திருந்தார். அதில் ‘நரேந்திர தபோல்கருக்கு என்ன நேர்ந்ததோ அது விரைவில் உங்களுக்கும் நேரும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, சரத் பவாரின் மகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தற்போதைய துணைத் தலைவருமான சுப்ரியா சுலே இந்தக் கொலை மிரட்டல் விவகாரம் குறித்து வெள்ளிக்கிழமை போலீஸில் புகார் தெரிவித்திருந்தார். அப்போது, சரத் பவாரின் பாதுகாப்புக்கு மத்திய, மாநில உள்துறை அமைச்சகங்கள் பொறுப்பு என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்தக் கொலை மிரட்டல் குறித்து பதிலளித்திருந்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சரத் பவாரின் பாதுகாப்பைப் பலப்படுத்த உத்தரவிட்டிருந்தார்.
மாநிலத்தின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்,”தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பபட்டுள்ளதை பொறுத்துக் கொள்ளமுடியாது” என்று தெரிவித்திருந்தார்.