பெய்ஜிங்: சீனாவில் பணிபுரியும் கடைசி இந்திய பத்திரிகையாளரும் இம்மாத இறுதிக்குள் வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நான்கு இந்திய பத்திரிகையாளர்கள் தங்களது நிறுவனங்கள் சார்பில் சீனாவில் செய்தி சேகரிக்க சென்றிருந்தனர். இதில் மூவரின் விசா காலாவதியானதை அடுத்து, அவர்களது விசாவை புதுப்பிக்க சீன அரசு மறுத்துவிட்டது. அதனால் கடந்த மாத இறுதியில் அவர்கள் சீனாவை விட்டு வெளியேறினர். பிடிஐ செய்தியாளர் மட்டும் சீனாவில் தங்கியிருந்த நிலையில், தற்போது அவரையும் இம்மாத இறுதிக்குள் வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளது அந்நாட்டு அரசு.
முன்னதாக, “இந்தியாவில் பணியாற்றும் சீன பத்திரிகையாளர்களை இந்திய அரசு பாகுபாட்டுடனும், நியாயமற்ற முறையிலும் நடத்துகிறது” என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் குற்றம் சுமத்தினர்.
மேலும், “தற்போது, இந்தியாவில் ஒரேயொரு சீனப் பத்திரிகையாளர் மட்டுமே எஞ்சியிருக்கிறார். அவரும் விசா நீட்டிப்புக்காக காத்திருக்கிறார். முன்னதாக, நடப்பு ஆண்டின் துவக்கத்த்தில் சின்ஹுவா நியூஸ் ஏஜென்சி, சைனா சென்ட்ரல் டெலிவிஷன் ஆகிய நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் விசா கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், அதனை இந்திய அரசு அனுமதிக்கவில்லை. 2020 முதல் சீன பத்திரிகையாளர்களின் விசாக்கள் இந்தியாவால் அங்கீகரிக்கப்படவில்லை. இதன் விளைவாக 14 என்ற எண்ணிக்கையில் சீன நிருபர்கள், தற்போது ஒரேயொரு நபராக குறைந்துள்ளது” என்றும் வாங் வென்பின் குற்றம்சாட்டினார்.
சீனாவின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா, “சீன நிருபர்கள் எந்த சிரமமும் இல்லாமல் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், சீனாவில் உள்ள இந்திய பத்திரிகையாளர்களுக்கு அந்த சுந்தந்திரம் இல்லை. கடந்த மாதம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த சீன நிருபர்களுக்கு இந்தியா தற்காலிக விசா அனுமதி அளித்தது.
அனைத்து வெளிநாட்டு ஊடகவியலாளர்களையும் நாட்டிற்குள் செயல்பட இந்தியா அனுமதித்தது. இதேபோல், சீனாவும் இந்திய பத்திரிகையாளர்களையும் அங்கு அனுமதிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்” என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.