புதுடெல்லி: கர்ப்பிணி தாய்மார்கள் பிறக்கப்போகும் தங்கள் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மனநலத்தை உறுதி செய்ய ராமாயணம் போன்ற இதிகாசங்களைப் படிக்க வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஒரு பிரிவான சம்வர்தினி நியாஸ் என்ற அமைப்பின் ’கர்ப்ப சன்ஸ்கார்’ என்ற திட்டத்தை காணொலி மூலம் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜான் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
கிராமங்களில், தாய்மார்கள் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் நல்ல கதைகளையும் படிப்பதை பார்த்திருக்கிறோம். குறிப்பாக தமிழ்நாட்டில், கர்ப்பிணி தாய்மார்கள் கம்பராமாயணத்தில் உள்ள சுந்தர காண்டத்தை படிக்க வேண்டும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. கர்ப்ப காலத்தில் சுந்தர காண்டம் படிப்பது கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நன்மை பயக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் யோகா பயிற்சி செய்வது, தாய் மற்றும் குழந்தை இருவரின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துகிறது. சுகப்பிரசவத்துக்கும் உதவுகிறது.
இவ்வாறு தமிழிசை பேசினார்.
சுந்தர காண்டம் என்பது ராமாயணத்தின் ஐந்தாவது காண்டம் ஆகும். இது அனுமாரின் அறிவுக் கூர்மையும், வீரத்தையும் பேசுகிறது.