புதுடெல்லி,
கொரோனா தடுப்பூசி திட்டத்தை கண்காணிக்க கோவின் செயலி, மத்திய அரசு சார்பில் கோவின் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. கோவின் செயலியில், பிறந்த தேதி, ஆதார் எண், பாஸ்போர்ட் எண், முகவரி என தங்களின் விவரங்களைப் பதிவுசெய்த அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்களின் தரவுகள் டெலிகிராம் போட் (Telegram Bot) மூலம் வெளியில் கசிந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ‘கோவின் செயலி’ பாதுகாப்பானது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. கோவின் செயலியில் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தரவு மீறல் பற்றிய அனைத்து அறிக்கைகளும் எந்த அடிப்படையும் இல்லாமல் உள்ளதாகவும் தனிநபர் தகவல்கள் கசிந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு CERT-In ஐ மத்திய சுகாதார அமைச்சகம் கோரியுள்ளது.