ரோம்: இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமரும் அங்குள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவருமான சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86வது வயதில் காலமானார்.
ஐரோப்பாவில் இருக்கும் நாடுகளில் ஒன்றான இத்தாலியில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இருப்பினும் பிரதமராக இருந்த போது அவர் தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளில் சிக்கியவர்.
ஒரு காலத்தில் தன்னை இயேசுவோடு கூட ஒப்பிட்டுக் கொண்ட நபர்.. இவருக்கு லுகேமியா பாதிப்பு இருந்த போதிலும், கடைசி வரை எம்பியாக இருந்தவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இருப்பினும், சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் இவர் அதிகம் கலந்து கொள்ளவில்லை.
இத்தாலி அரசியல்வாதி: இவர் தீவிர அரசியலுக்கு வரும் முன்பு, இத்தாலியின் மிகப்பெரிய ஊடக நிறுவனத்தை உருவாக்கினார். அதன் பின்னர் அரசியலில் நுழைந்து அவர் பிரதமர் பதவிக்கும் வந்தார். அவருக்கு நுரையீரல் தொற்றால் ஏற்படும் மைலோமோனோசைடிக் லுகேமியா என்ற ஒரு வகை பாதிப்பு ஏற்பட்டது. இது வெள்ளை ரத்த அணுக்களைப் பாதிக்கும் ஒரு வகை புற்றுநோய் ஆகும். இதற்காக அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
அங்கே அவருக்கு ஆறு வாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்தச் சூழலில் தான் அவர் இப்போது உயிரிழந்துள்ளார். அவருக்கு 86 வயது ஆகும். கடந்த சில ஆண்டுகளாகவே அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. 2016ஆம் ஆண்டில் முதலில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு 2020இல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இணை நோய்கள்: அப்போது அவருக்குப் பல இணை நோய்கள் இருந்த நிலையில், அவர் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அவர் பல மருத்துவமனைகளில் அட்மிட் ஆக வேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டார். இருப்பினும், பிரதமர் பதவியில் இருந்த போது தொடர்ச்சியாகச் சர்ச்சையில் சிக்கி வந்தவர் சில்வியோ பெர்லுஸ்கோனி.
பெர்லுஸ்கோனி தனது டிவி மற்றும் செய்தித்தாள்களை அரசியலில் நல்ல இடத்தை பெறப் பயன்படுத்திக் கொண்டார். டிரம்பிற்கு முன்பே தனது வணிக வெற்றியை வைத்து அரசியலில் வெற்றி பெற்றவர் பெர்லுஸ்கோனி.. அதேநேரம் அவர் மீது பல வரி ஏய்ப்பு புகார்களும் உள்ளது. ஊடக சாம்ராஜ்யத்தை வைத்து அரசியலில் சாதித்த அவர், பின் தனது அதிகாரத்தை வைத்து பிஸ்னஸை மேலும் விரிவாக்கினார்.
புங்கா புங்கா: அவர் மீது பெரும்பாலான காலம் நீதிமன்றத்தில் எதாவது ஒரு வழக்கு நடந்து கொண்டே தான் இருக்கும். அந்தளவுக்குச் சர்ச்சைக்கு மத்தியிலேயே இருந்தார். குறிப்பாக அவரது மோசமான “புங்கா புங்கா” செக்ஸ் பார்ட்டி சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியது. அதில் 18 வயதுக்குக் குறைவான பெண்களும் கூட கலந்து கொண்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அவர் இப்போது 33 வயது காதலி மார்டா ஃபாசினா என்பவருடன் வசித்து வந்தார். அவருக்கு இரண்டு முன்னாள் மனைவிகள் மூலம் ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவர்களில் சிலர் தான் இப்போது அவரது பிஸ்னசை பார்த்துக் கொள்கிறார்கள்.
உடல்நலக் குறைவால் கடந்த சில ஆண்டுகளாகவே பொது வாழ்க்கையில் இருந்து சில்வியோ பெர்லுஸ்கோனி ஒதுங்கியே இருந்தார். இந்தச் சூழலில் தான் அவர் இன்று தனது 86வது வயதில் காலமானார்.