திருவனந்தபுரம்: மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா ஸ்டாராக மாஸ் காட்டும் துல்கர், தற்போது கிங் ஆஃப் கோதா படத்தில் நடித்துள்ளார்.
கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இப்படத்தின் கிளைமாக்ஸ் சீனில் திருப்தி இல்லாததால் படக்குழு அதிரடியாக முடிவெடுத்துள்ளது.
கிளைமாக்ஸ் சீனால் வந்த பஞ்சாயத்து
மலையாள திரையுலகின் மெகா ஸ்டார், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மம்முட்டி. அவரது மகன் துல்கர் சல்மானும் இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருகிறார். அப்பாவும் மகனும் போட்டிப் போட்டு நடித்து வருகின்றனர். இந்நிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் கிங் ஆஃப் கோதா.
கேங்ஸ்டர் ஜானரில் பக்கா ஆக்ஷன் மூவியாக உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். துல்கர் சல்மானுடன் ஐஸ்வர்யா லக்ஷ்மி, ரித்திகா சிங், சார்ப்பட்டா பரம்பரை புகழ் ‘டான்சிங் ரோஸ்’ சபீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிங் ஆஃப் கோதா படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் காரைக்குடி பகுதிகளில் தான் நடைபெற்றது. இதனால் இந்தப் படம் கோலிவுட் ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
1980களில் நடைபெறும் பீரியட் படமாக இது உருவாகியுள்ளதோடு, நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் இப்படத்தில் லீடிங் கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிங் ஆஃப் கோதா இந்தாண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 24ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனால், வேகமாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் தொடங்கியது. இந்நிலையில் தான் கிங் ஆஃப் கோதா படத்தின் கிளைமாக்ஸ் சீன் சரியாக வரவில்லை என இயக்குநர் மீது துல்கர் சல்மான் அதிருப்தியில் உள்ளார். இதனால், கிளைமாக்ஸ் காட்சிகளை மட்டும் மீண்டும் ஷூட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார்களாம். இதனையடுத்து பேக்கப் பன்ன ஆர்ட்டிஸ்ட் அனைவரும் மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட் செல்ல ரெடியாகிவிட்டார்களாம்.
பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள கிங் ஆஃப் கோதா படத்திற்கு நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜேக்ஸ் பிஜாய், ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப் படம் துல்கர் சல்மான் கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் கிங் ஆஃப் கோதா படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.