ஆந்திர மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தமிழில் இயக்கிய ’செம்பருத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக ரோஜா அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், பின்னர் தீவிர அரசியலில் இறங்கினார். ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ரோஜா, தற்போது ஆந்திர பிரதேசத்தில் உள்ள நகரி தொகுதியின் எம்.எல்.ஏ ஆகவும், சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறையின் அமைச்சராகவும் உள்ளார்.
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோடில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரோஜா அனுமதிக்கப்பட்டுள்ளார். காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.