சேலம்: சேலத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்த நிலையில், வெடி விபத்தில் சிக்கிய ஒன்பது பேரும் உயிரிழந்தனர்.
சேலம் இரும்பாலையை அடுத்த எஸ்.கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருபவர் கந்தசாமி. கடந்த ஜூன் முதல் வாரத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் கந்தசாமியின் மகன் சதீஷ்குமார் (40), நடேசன் (50) மற்றும் பானுமதி (35) உள்ளிட்ட 3 பேர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும், இந்த வெடி விபத்தில் எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த வசந்தா (45), மோகனா (38), மணிமேகலை (36), மகேஸ்வரி (32), பிரபாகரன் (31) மற்றும் பிருந்தா (28) ஆகிய 6 பேர் படுகாயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வந்த பிரபாகரன், மோகனா, மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிமேலை (36) கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். பிருந்தா (28) நேற்று முன் தினம் பிற்பகல் உயிரிழந்தார். இதையடுத்து பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது. இந்நிலையில், அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வசந்தா நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். இதையடுத்து, பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் சிக்கிய அனைவரும் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகள் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.