போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தொடங்கி உள்ளார். காங்கிரஸ் கட்சியான கொடுத்த வாக்குறுதிகளை ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றி இருக்கிறது என தெரிவித்தார் பிரியங்கா காந்தி.
230 தொகுதிகளைக் கொண்டது மத்திய பிரதேச சட்டசபை. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள். 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வென்றது. பாஜக 109 இடங்களைக் கைப்பற்றியது. சுயேட்சைகள், இதர கட்சிகள் இணைந்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தது. முதல்வராக கமல்நாத் பதவி வகித்தார். ஆனால் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் கமல்நாத் அரசு கவிழ்ந்தது. தற்போது பாஜக ஆட்சி முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் சமபலத்துடன் களத்தில் இருக்கின்றன. இரு கட்சிகளுக்கும் இடையே வாக்கு சதவீத வேறுபாடு 1% . தற்போதைய ஆளும் பாஜக அரசு மீது கடும் அதிருப்தி நிலவுவதால் மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரவே வராது என இதுவரையிலான அனைத்து தேர்தல் கணிப்புகளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. பாஜகவுக்கு இம்முறை 50 தொகுதிகளுக்கும் குறைவான இடங்கள்தான் கிடைக்கும் எனவும் அக்கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுவரையில் 6 கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். நடத்திய கருத்து கணிப்பும் அடக்கம். இவை அனைத்துமே பாஜகவுக்கு பெருந்தோல்வி காத்திருக்கிறது என்றே சொல்லுகின்றனவாம். இது பாஜக மேலிடத்தை ரொம்பவே அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.
இந்நிலையில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தொடங்கி உள்ளார். நர்மதை நதிக்கு பூஜை செய்த பின்னர் தமது பிரசாரத்தை பிரியங்கா காந்தி தொடங்கினார். ஜபல்பூரில் பிரியங்கா காந்தி இன்று பிரசாரம் செய்தார். அங்கு ஹனுமானின் கடாயுதத்தை வைத்து பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா. டபுள் என்ஜின், டிரிபிள் என்ஜின் அரசாங்கம் என்றெல்லாம் பேசுவார்கள்.. அதெல்லாம் எடுபடாது. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்திலும் கர்நாடகாவிலும் மக்கள் , காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்துள்ளனர். ஆகையால் மத்திய பிரதேச மாநில வாக்காளர்களும் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.