`டார்கெட் 25' – அமித் ஷா விசிட்… முற்றும் வார்தைப்போர்; அதிமுக – பாஜக உறவில் விரிசலா?!

பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாள்கள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்து சென்றார். கடந்த சனிக்கிழமை ( ஜூன் 10-ம் தேதி) இரவு விமானம் மூலம் சென்னைக்கு வந்த அமித் ஷா, சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் உட்பட பல்வேறு தரப்பினரைச் சந்தித்தார்.

அமித் ஷா

வேலூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11-ம் தேதி) நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசினார். அப்போது, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் பா.ஜ.க ஆட்சியமைப்பது உறுதி. செங்கோலின் தலைமையில் ஆட்சியமைக்க 25-க்கும் மேற்பட்ட எம்.பி-க்களை தமிழ்நாட்டு மக்கள் அனுப்பிவைக்க வேண்டும்” என்றார் அமித் ஷா.

ஏற்கெனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்பது தொகுதிகளை பா.ஜ.க குறிவைத்திருக்கிறது என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சமீபத்தில் பேசினார். “நாங்­கள் அடை­யா­ளம் கண்­டிருக்கும் ஒன்­பது தொகுதிகளில் கூடு­தல் கவ­னம் செலுத்­தப்­படும். முதற்­கட்­ட­மாக, தென்­சென்னை நாடா­ளு­மன்­றத் தொகு­தி­யில் பணி­கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. மத்­திய அமைச்­சர் கிஷன் ரெட்டி மேற்­பார்­வை­யில் இந்தப் ­ப­ணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன” என்றார் எல்.முரு­கன்.

எல்.முருகன்

அந்தப் பேச்சு, அ.தி.மு.க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வெறும் ஐந்து தொகுதிகளை மட்டுமே அ.தி.மு.க ஒதுக்கியது. அப்படியிருக்கும்போது, தற்போது ஒன்பது தொகுதிகளைக் குறிவைப்பதாக எல்.முருகன் பேசியது, அ.தி.மு.க தலைமையை சூடேற்றியது. இதன் காரணமாக, அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.

இந்த நிலையில் தற்போது, வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, 25 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்ற பொருளில் பேசியிருக்கிறார். அ.தி.மு.க கூட்டணி 25 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் அவர் பேசியிருக்கிறார். ஆனாலும், தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டுப் பேசுவதை அ.தி.மு.க தரப்பு விரும்பவில்லை.

எடப்பாடி பழனிசாமி

மேலும், அமித் ஷா தமிழ்நாட்டுக்கு எப்போது வந்தாலும், அவரைச் சந்திப்பதற்கு நேரம் கேட்டு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காத்திருப்பது வழக்கம். ஆனால், இந்த முறை அமித் ஷாவைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் எதுவும் கேட்கவில்லை. அமித் ஷாவைச் சந்திக்க அவர் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

இத்தகைய சூழலில்தான், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, முந்தைய அ.தி.மு.க ஆட்சி பற்றியும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றியும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் விமர்சனம் செய்திருப்பது, அ.தி.மு.க-வினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

அந்தப் பேட்டியில், ‘1991-96 காலக்கட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சி, மிக மோசமான ஊழல் ஆட்சி என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?’ என்ற கேள்வி அண்ணாமலையிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு, ‘தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மலிந்த ஆட்சிகளாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான், தமிழ்நாடு மிகவும் ஊழல் மலிந்த மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. ஊழலில் நம்பர் ஒன் தமிழ்நாடுதான்’ என்று அண்ணாமலை பதிலளித்திருக்கிறார்.

அண்ணாமலை

‘முன்னாள் முதல்வர்கள்’ என்று பொதுவாக அவர் சொன்னாலும், ஜெயலலிதாவைத்தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை அந்தப் பேட்டியைப் படித்த அனைவருக்கும் தெரியும். அதுதான், அ.தி.மு.க-வினரின் கொந்தளிப்புக்குக் காரணம்.

“மறைந்த எங்கள் தலைவர் ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சனம் செய்திருப்பதைக் கண்டு ஒவ்வொரு அ.தி.மு.க-காரரும் கொதித்துப்போயிருக்கிறார்கள். அண்ணாமலை இவ்வாறு கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கும் அண்ணாமலைக்கு வரலாறும் தெரியவில்லை… பாரம்பர்யமும் தெரியவில்லை. தன்னை முன்னிலைப்படுத்திக்கெள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அ.தி.மு.க-மீது சேற்றைவாரி வீசுகிறார்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளித்திருக்கிறார், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

மேலும் அவர், “ஊழல் பற்றி பேசும் அண்ணாமலை, கர்நாடகாவில் நடந்த பா.ஜ.க ஆட்சியை, ‘40 சதவிகிதம் கமிஷன் அரசு’ என்கிறார்கள். எந்த அரசும் இந்தளவுக்கு கமிஷன் வாங்கியதில்லை என்று கான்ட்ராக்டர்கள் அசோசியேஷன் குற்றம்சாட்டியது. ஊழல் பற்றி பேசுகிற அண்ணாமலை, அந்த 40 சதவிகித கமிஷன் பற்றி பேச வேண்டியதுதானே” என்றார்.

ஜெயக்குமார்

“தமிழ்நாட்டில் 20 வருடங்களுக்குப் பிறகு, பா.ஜ.க-விலிருந்து நான்கு எம்.எல்.ஏ-க்கள் வந்திருக்கிறார்கள். அ.தி.மு.க தானே அதற்குக் காரணம். எங்கள் தலைமையிலான கூட்டணியில் இருக்கும்போதுதான், பா.ஜ.க-வுக்கு ஓர் அடையாளம் இருக்கும். அப்படியிருக்கும்போது, கூட்டணியை முறிக்கிற அளவுக்கு அண்ணாமலை பேசலாமா… மறைந்த எங்கள் தலைவரைப் பற்றி அண்ணாமலை மிகவும் தவறாகக் கூறியிருப்பதால், அ.தி.மு.க-வின் இரண்டு கோடி தொண்டர்களும் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, பா.ஜ.க-வின் அகில இந்திய தலைவர்களான அமித் ஷாவும், ஜே.பி.நட்டாவும் அண்ணாமலையைக் கண்டிக்க வேண்டும்” என்றும் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

அமித் ஷாவும், ஜே.பி.நட்டாவும் அண்ணாமலையைக் கண்டிக்க வேண்டும் என்கிறார் ஜெயக்குமார். ஆனால், அ.தி.மு.க-வையும் அதன் தலைவர்களையும் அண்ணாமலை விமர்சிப்பது இது ஒன்றும் முதன் முறை கிடையாது. பா.ஜ.க மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து எத்தனையோ முறை அதி.மு.க-வையும் அதன் தலைவர்களையும் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார்.

அண்ணாமலை – எடப்பாடி பழனிசாமி

அதற்காக, அண்ணாமலையை பா.ஜ.க தலைமை கண்டித்ததாகத் தெரியவில்லை. மாறாக, அண்ணாமலை சிறப்பாகச் செயல்படுகிறார் என்றுதான் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க-வின் அகில இந்திய தலைவர்கள் பாராட்டவே செய்திருக்கிறார்கள்.

தற்போது, இரு கட்சிகளுக்கும் இடையிலான உரசலால், கூட்டணி முறிந்தவிடும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால், இவர்களின் கூட்டணியில் விரிசல் அதிகரித்திருக்கிறது என்பதுமட்டும் நிச்சயம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.