புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பைக் டாக்ஸிகளுக்கு மாநில அரசால் விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது.
டெல்லி அரசு கடந்த பிப்ரவரி மாதம் ரேபிடோ, உபர் உள்ளிட்ட பைக் டாக்ஸி சேவைகளைத் தடை செய்வதாக அறிவித்தது. தடையை மீறினால் ரூ.10,000 அபராதமும், ஓராண்டு சிறையும் விதிக்கப்படும் என்று கெடுபிடி விதித்தது. பைக் டாக்ஸிகளால் வேலைவாய்ப்புகள் உருவானாலும், பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது என்று தடைக்கான விளக்கத்தையும் டெல்லி அரசு நல்கியது.
ஆனால், பைக் டாக்ஸி தடையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அப்போது பைக் டாக்ஸி இயக்குவது தொடர்பாக அரசாங்கம் இறுதிக் கொள்கையை வெளியிடும் வரை ரேபிடோ, உபெர் போன்ற பைக் டாக்ஸி சேவை வழங்குநர்கள் இயங்கலாம் என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது. இதனை மாநில அரசு ஏற்றுக் கொள்வதாக இல்லை. அந்தத் தடையை எதிர்த்து டெல்லி மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்தது.
அந்த மனுக்கள் இன்று (ஜூனெ 12) உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் அனிருத்தா போஸ், ராஜேஷ் பிந்தால் பைக் டாக்ஸி தொடர்பாக அரசாங்கம் இறுதிக் கொள்கையை வகுக்கும் வரையில் உபெர், ரேபிடோ பைக் டாக்ஸிகளை இயக்க இயலாது. இந்த வழக்கினை டெல்லி உயர் நீதிமன்றம் மேற்கொண்டு விசாரிக்கலாம் என்று தெரிவித்தனர்.