
'தண்டட்டி' படத்தை தடை செய்யுங்கள் : தயாரிப்பாளர் கோரிக்கை
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள படம் 'தண்டட்டி'. அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற 28ம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பாளர் சதீஷ் குமார் இந்த படத்தை தடை செய்ய சொல்லி தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: எனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கடந்த 2017ம் ஆண்டு 'அண்டாவ காணோம்' படத்தைத் தயாரித்து அதற்கு தணிக்கையும் செய்திருக்கிறோம். அப்போது படத்தை வெளியிட முடியாமல் சில காரணங்களால் தடைபட்டு, இப்போது வெளியிட தயாராகி வருகிறோம். இந்த நிலையில், 'அண்டாவ காணோம்' படத்தின் கதையும், பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள 'தண்டட்டி' படத்தின் கதையும் ஒன்றாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 'தண்டட்டி' திரைப்படத்தைப் பார்த்து என்னுடைய கதையோடு பொருந்திப் போயிருந்தால், 'தண்டட்டி' படத்தை வெளியிட தடை விதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.