தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு வேலைக்கு செல்லும் நடுத்தர மக்களின் அதிர்ஷ்ட ஆசையால், தான் சம்பாதிக்கும் பணத்தை, ஏராளமான லாட்டரிகளை வாங்குவதன் மூலம் இழந்து வருகின்றனர். வியாபார நோக்கில் சிலர், கேரளா லாட்டரிகளை பெருமளவில் வாங்கி வந்து தமிழகத்தில் குறிப்பாக தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக விற்று வருகின்றனர்.
சட்ட விரோதமாக லாட்டரி விற்று வந்த இருவரை கம்பம் காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், பெரும்பாலும் கேரள மாநில எல்லைப் பகுதி குமுளிக்கு தேனி, கம்பம், கூடலூர் போன்ற பகுதிகளில் இருந்து கூலி வேலைக்கு செல்லும் மக்களே அதிகம் என்பதாலும், எல்லை பகுதி என்பதாலும் சுலபமாக லாட்டரிகள் தமிழகத்திற்குள் நுழைந்து விடுவதாகவும், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினர்.
லாட்டரி விற்றவர்கள் கைது: கூடலுரை சேர்ந்த பொன்னப்பன்(70) என்ற நபர் அப்பகுதியில் இருக்கும் காய்கறி மார்க்கெட் அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்தார். தகவலறிந்து அங்கு வந்த போலிசார் அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கம்பத்தில் உள்ள கம்பம்மெட்டு சாலையில் லாட்டரி விற்ற ராஜாவை, கம்பம் வடக்கு எஸ்ஐ முனியம்மாள் கைது செய்தார்.
ரூ.64 ஆயிரத்து 680 மதிப்புள்ள லாட்டரியும், லாட்டரி விற்ற பணம் ரூ.15 ஆயிரமும் அந்த நபரிடம் போலீசார் பறிமுதல் செய்தனர் . கைது நடவடிக்கையை தொடர்ந்து எடுக்கப்பட்டாலும் லாட்டரி விற்பனையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதிக ஆசையால் ஏராளமான தொழிலாளிகள் தங்களது பணத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர்