பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பிரதமர் வேட்பாளர் என கட்சித் தொண்டர்கள் கோஷம் போடக் கூடாது; போஸ்டர்கள் ஒட்டக் கூடாது என ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியூ) உத்தரவிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலை காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து சந்திப்பது என்கிற வியூகத்தில் படுதீவிரமாக இருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். இதன் முதல் கட்டமாக பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது.
பாட்னா எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை வேறு தேதியில் ஒத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனையடுத்து இந்த ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக அல்லாத பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸுடன் தேர்தலில் மோதுவதால் இந்த கூட்டத்துக்கும் அழைக்கப்படவில்லை.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் அனைத்து எதிர்க்கட்ச்களும் ஒருங்கிணைந்து நின்று பாஜக நிற்கும் தொகுதிகளில் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. அப்படி எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் பாஜகவால் 100 இடங்கள் கூட வெல்ல முடியாது என்பது இக்கட்சிகளின் தலைவர்கள் கருத்து. இது தொடர்பாக ஏற்கனவே மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த யோசனை, பாட்னா கூட்டத்தில் பிரதான ஒன்றாக விவாதிக்கப்படக் கூடும்.
இந்நிலையில்தான் பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார்தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்கிற கோஷத்தை ஐக்கிய ஜனதா தளம் தொண்டர்கள் முன்வைக்கின்றனர். போஸ்டர்களையும் ஒட்டி வருகின்றனர். ஏற்கனவே தாம் பிரதமர் வேட்பாளர் இல்லை என திட்டவட்டமாக நிதிஷ்குமார் தெரிவித்திருந்த போதும் அக்கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து இம்முழக்கத்தை எழுப்புகின்றனர். அதுவும் தற்போது எதிர்க்கட்சிகளின் சங்கமம் நடைபெறும் நிலையில் இது பிற கட்சிகளுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கலாம் என்பதால் இத்தகைய முழக்கங்கள், போஸ்டர்களை தவிர்க்க வேண்டும் என ஜேடியூ தொண்டர்களுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் லாலன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.