சென்னை: “நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அநீதியானது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீர்ஜா கபூர் இந்தி பேசாத மக்களையும், இந்தி பேசாத ஊழியர்களையும் அவமதித்ததுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். எமது மண்ணில் தமிழுக்குப் பதிலாக இந்தியைத் திணிக்கும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் அனைத்துக் குடிமக்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துவரும் நிலையில், மத்திய அரசும் அதன் நிறுவனங்களும் பிற இந்திய மொழிகளைவிட இந்திக்கு அனைத்து வழிகளிலும் தேவையற்ற மற்றும் நியாயமற்ற ஆதரவைத் தொடர்ந்து வழங்குகின்றன. மேலும், மக்கள் நலனுக்காக அல்லாமல், இந்தியை நம் தொண்டையில் திணிக்கவே அவர்கள் தங்கள் மதிப்புமிக்க வளங்களைச் செலவிட விரும்புகிறார்கள்.
இவ்வகையில் சமீபத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அநீதியானது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீர்ஜா கபூர் இந்தி பேசாத மக்களையும் மற்றும் இந்தி பேசாத ஊழியர்களையும் அவமதித்ததுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்தியாவில் இந்தி பேசாத குடிமக்கள் தங்கள் கடின உழைப்பாலும் திறமையாலும் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தங்களின் பங்களிப்புகளை அளிக்கும்போதிலும், அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதைச் சகித்துக் கொள்ளும் காலம் மலையேறிவிட்டது.
இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடும், திமுகவும் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம். மத்திய அரசில் ரயில்வே, அஞ்சல் துறை, வங்கி, நாடாளுமன்றம் என அனைத்து இடங்களிலும் எம்மையும், எமது மக்களையும் அன்றாடம் பாதிக்கும் வகையில் இந்திக்கு வழங்கப்படும் அவசியமற்ற சிறப்புநிலையை நீக்குவோம்.
நாங்கள் எங்கள் வரிகளை செலுத்துகிறோம், முன்னேற்றத்திற்குப் பங்களிக்கிறோம், எங்கள் வளமான மரபு மற்றும் இந்த நாட்டின் பன்முகத்தன்மையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். எங்கள் மொழிகள் சமமாக நடத்தப்பட வேண்டும். எமது மண்ணில் தமிழுக்குப் பதிலாக இந்தியைத் திணிக்கும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.