பனாரஸ் இந்து பல்கலை.யில் மொழிகள் ஆய்வுக்கூடம் திறப்பு

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழக அரசின் அதிகாரிகள் ஜுன் 9, 10-ல் கள ஆய்வு செய்தனர். அப்போது, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (பிஎச்யு) தமிழ் மொழி ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்து, அந்நகரில் பாரதியார் வாழ்ந்த வீட்டில் தமிழக அரசு அமைத்த நினைவகத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.

நாட்டின் பழம்பெரும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருப்பது பிஎச்யு. இதன் இந்திய மொழிகள் துறையின் தமிழ் பிரிவிற்கு கடந்த கால அதிமுக அரசின் சார்பில் 2019-20 பட்ஜெட்டில் மூன்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றாக பிஎச்யுவின் தமிழ் பிரிவிற்கு தமிழக அரசின் நிதி உதவியால் ஒரு உதவிப் பேராசிரியரை அமர்த்த அனுமதிக்கப்பட்டது.

இரண்டாவதாக, தமிழ் கற்க பட்டயப் படிப்பில் சேரும் பிறமொழி மாணவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தைத் தமிழ் வளர்ச்சித் துறை ஏற்கிறது.

மூன்றாவதாக, ரூ.8 லட்சம் செலவில் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் பிறமொழியாளர்களுக்கு தமிழ் பயிற்றுவிப்பதற்காக நவீன வசதிகளுடன் மொழி ஆய்வுக்கூடம் அமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதுபோல், மாநில அரசால் அளிக்கப்படும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என பெரும்பாலான ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதில்லை. இந்தமுறை அப்படி இல்லாமல், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அதன் அதிகாரிகளை ஜுன் 9,10 தேதிகளில் நேரில் அனுப்பி களஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அதில், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ஆர்.செல்வராஜ் ஐஏஎஸ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தமிழக அரசின் முதல் திட்டத்தின்படி உதவி பேராசிரியர் இன்னும் அமர்த்தப்படாமல் உள்ளது. இதற்காக உடனடியாக விளம்பரம் வெளியிட்டு நேர்முகத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இரண்டாவதாக பட்டயப்படிப்பில் தமிழ் பயிலும் மாணவர்கள்சுமார் 50 பேர் பலன் பெற்றிருப்பது தெரிந்துள்ளது. மூன்றாவது, மொழிகள் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டிருந்தாலும் அது, இன்னும் முறையாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால், மொழி ஆய்வுக்கூடத்தை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின்போது, இயக்குநர் ந.அருள், பிஎச்யுவின் இந்திய மொழிகள் துறைத் தலைவரான பேராசிரியர் திவாகர் பிரதான், மராத்திய மொழித் துறைத் தலைவரும், பேராசிரியருமான பிரமோத் படுவல், வரலாற்றுத் துறைப் பேராசிரியர் கங்காதரன், தமிழ்ப் பிரிவுஉதவிப் பேராசிரியர்கள் ஜெகதீசன், விக்னேஷ் ஆனந்த் மற்றும் ஆய்வு மாணவர்கள் உடனிருந்தனர்.

வாரணாசியின் அனுமன் படித்துறை பகுதியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தம் இளமைக் காலத்தில் வாழ்ந்த வீடு உள்ளது. இங்கு தற்போது அவரது சகோதரி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் ஒரு சிறிய அறையை பாரதியாரின் நினைவகமாக்கி அவரது பிறந்தநாளான டிசம்பர் 11 அன்று காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையும் நேரில் சென்ற தமிழக அதிகாரிகள் ஜுன் 9-ல் பார்வையிட்டனர்.

அங்கிருந்த பாரதியார் குடும்பத்தினரிடம், நினைவிடப் பார்வையாளர்கள் கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்தனர். அப்போது, பாரதியார் எழுதிய நூல்கள் மேலும் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.