ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் ஜூன் 7ஆம் தேதிக்கு மாற்றப்பட்டன. மீண்டும் கோரிக்கைகள் எழுந்த நிலையில் பள்ளிகள் திறப்பு ஜூன் 12ஆம் தேதிக்கு (இன்று) தள்ளி வைக்கப்பட்டது. 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள், சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பும் மாணவர்களை உற்சாகமாக வரவேற்க பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் போன்ற நலத் திட்ட பொருட்களை முதல் நாளான இன்று முதலே விநியோகம் செய்வதற்கான பணிகள் நடைபெறுகின்றன.
அரசுப் பேருந்துகளில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படும். இந்த ஆண்டு பஸ் பாஸ் ஸ்மார்ட் கார்டாக வழங்கப்பட உள்ளது. உடனடியாக அதை வழங்க முடியாத சூழல் நிலவுவதாகவும் ஜூலை மாதமே அதை விநியோகிக்க முடியும் என்ற நிலையில் பள்ளி சீருடை அணிந்த மாணவர்களிடம் கட்டணம் கேட்க கூடாது என்று நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல் ஏற்படாது.
உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை 11 மணியளவில் உறுதிமொழி எடுக்க வேண்டும். அது குறித்து மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதை ஈடுசெய்ய சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் மாணவர்களுக்கு பாட சுமை அதிகளவில் ஏற்றப்படாமல் சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.