கராச்சி,
பாகிஸ்தானில் தெற்கு சிந்து மாகாணம் டன்டோ அல்லாஹ்யார் பகுதியை சேர்ந்தவள் ரவீணா மேக்வால் என்ற இந்து சிறுமி. இந்த சிறுமி சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியில் இருந்து கடத்தப்பட்டாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக போராடும் ‘பாகிஸ்தான் தாராவர் இத்தேஹத்’ அமைப்பும் புகார் செய்தது.
அதையடுத்து, கராச்சிக்கு தனிப்படை போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டு, மிர்புர்காஸ் கொண்டுவரப்பட்டாள். அவளை கடத்திச் சென்ற குடும்பத்தினர், சிறுமி, தனது சொந்த விருப்பத்தில் முஸ்லிம் மதத்துக்கு மாறியதுடன், ஜமோ கான் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, கோர்ட்டில் சிறுமி ஆஜர்படுத்தப்பட்டாள். அங்கு ஜமோ கான், திருமண சான்றிதழை சமர்ப்பித்தார். ஆனால், அவரது தேசிய அடையாள அட்டையை கேட்டபோது, அவரிடம் ஆப்கானிஸ்தான் அடையாள அட்டைதான் இருந்தது. அதன்மூலம், அவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.
பின்னர், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி, பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். பெற்றோரிடமும், உறவினரிடமும் சிறுமி பேச அனுமதித்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சிறுமி கூறும்போது, ”என்னை வலுக்கட்டாயமாக கடத்திச்சென்று, கராச்சியில் ஒரு வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு இஸ்லாம் மதத்துக்கு மாற்றிய பிறகு, ஜமோ கானுடன் திருமணம் செய்வதற்கான ஒப்பந்தத்தை வாசித்தனர்” என்று தெரிவித்தார்.