புதுச்சேரி: புதுச்சேரி உப்பளத்தில் கடந்த 1992-ம் ஆண்டு இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இங்கு 400 மீட்டர் சுற்றளவுள்ள ஓடு பாதை, புல்வெளி மைதானம், வீரர்கள் தங்குமிடம், பார்வையாளர்கள் அமர கேலரி ஆகியவை அமைக்கப்பட்டன. இத்துடன் கால்பந்து, நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், ஹாக்கி, கையுந்து பந்து, கைப்பந்து மைதானங்களும் உரு வாக்கப்பட்டன.
பிறகு ரூ.80 லட்சத்தில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டது. பகல் மட்டு மல்லாமல் இரவு நேரங்களிலும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். மாநில அளவிலான போட்டிகளும் பகல், இரவு நேரங்களில் நடத்தப்பட்டு வந்தன. இதனால் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்தனர். தொடர்ந்து, தேசிய போட்டிகளிலும் பங்கேற்று சாதித்து காட்டினர்.
காலப்போக்கில் முறையான பரா மரிப்பு இல்லாததால் மைதானத்தில் உள்ள தடகள வீரர்களுக்கான ஓடுபாதை, கால்பந்து மைதானம் உள்ளிட் டவை சேதமடைந்தது. இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் புதுச்சேரிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி இந்திரா காந்தி அரங்கில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி செலவில் 400 மீட்டர் சிந்தடிக் ட்ராக் (செயற்கை தடகள ஓடுபாதை ) அமைக்க அடிக்கல் நாட்டினார்.
மத்திய அரசு இதற்கான முதற்கட்ட நிதியாக ரூ.3 கோடி நிதியை விடுவித்தது. அதன் மூலம் ஆரம்ப கட்ட பணியாக 400 மீட்டர் ஓடு பாதை முழுவதும் தார் சாலை அமைக்கப்பட்டது. சிந்தடிக் ஒட்டும் பணிக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து சிந்தடிக் டிராக் லேயர் கொண்டு வரப்பட்டது. ஆனால் மீதியுள்ள ரூ.4 கோடியை மத்திய அரசு விடுவிப்பதில் நிர்வாக ரீதியாக சிக்கல் எழுந்தது. இதனால் சிந்தடிக் டிராக் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் ரூ.1.7 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியது. இதையடுத்து 400 மீட்டர் சுற்றளவுள்ள ஓடுபாதையில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணி மும்முரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தார் சாலை மீது சிந்தடிக் லேயர் ஒட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து தடகள வீரர்கள் ஓடுவதற்கான கோடுகள் வரையப்பட இருக்கிறது.
மேலும் இதன் நடுவே புல்வெளி கொண்ட கால்பந்து மைதானமும் அமைப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இது தொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை விளையாட்டுப் பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “ரூ.7 கோடியில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே ரூ.3 கோடிக்கு பணி கள் முடிந்த நிலையில், தற்போது ரூ.1.7கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதனால் சிந்தடிக் டிராக் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்ததாக கோடுகள் வரையப்பட இருக்கிறது. மேலும் இதன் மையத்தில் கால்பந்து மைதானத்துக்கு பிளாஸ்டிக்காலான கொரியன் கிராஸ் அமைக்கலாம். இது செலவு அதிகம் என்பதால் பசுமையான புல்தரையாகவே அமைக்கப்பட இருக்கிறது.
மேலும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கம்பு வைத்து உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தடை ஓட்டம் போன்ற போட்டிகளில் வீரர்கள் பயிற்சி செய்வதற்கான ஏற்பாடு களும் செய்யப்படவுள்ளது. இன்னும் ரூ.2.3 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை மத்திய அரசு சுணக்கம் காட்டாமல் உடனே விடுவித்தால் எஞ்சியுள்ள பணிகள் வேக மாக முடிக்கப்பட்டு, விரைவில் பயன் பாட்டுக்கு கொண்டு வரலாம்” என்று தெரிவித்தனர்.