மதுரை: கடந்த சில நாளுக்கு முன்பு மதுரை அருகிலுள்ள திருமோகூரில் இருதரப்பினருக்குள் மோதல் நடந்தது. இச்சம்பவத்தை கண்டித்து மதுரை புதூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி பங்கேற்று பேசியதாவது: திருமோகூரில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வரவேண்டும் என, அப்பகுதி மக்கள் கூறினர். தற்போது வேண்டாம் தேவையற்ற பதற்றம் உருவாகும் என்பதால் தவிர்த்தேன். ஒட்டுமொத்த மக்களும் வன்முறையை விரும்புவதில்லை. ஏழை மக்களை ஒடுக்க நினைப்பதில்லை. ஒரு சிலரின் பிழையால் கிராமத்திற்கு எதிராக திரும்புகிறது.
திருமோகூரில் போதை, கஞ்சாவுக்கு அடிமையான இளைஞர்களால் இச்சம்பவம் நடந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் இதுபோன்று ஒருசில இளைஞர்களால் பிரச்சனை உருவாகிறது. காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்தால் சமதானம் ஏற்படும். காவல்துறை உயரதிகாரிகளின் கீழே உள்ள ஒரு சில காவல்துறையினர் ஒரு சார்பாக இருப்பதால் இதுபோன்ற பிரச்சனை ஏற்படுகிறது.
மதுரை மாவட்டதில் அண்மை காலமாக பல்வேறு பகுதிகளில் தலித் மக்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் உள்நோக்கமோ , காவல்துறைக்கு எதிராகவோ இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்க மட்டுமே. சிலர் இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழக அரசுக்கு எதிரானது என, கூறுவர். இதை கண்டுகொள்ள கூடாது.
நாங்கள் திமுகவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறி, திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட சிண்டு மூட்டுகிறார்கள். திமுகவை எதிர்த்து சனாதன சக்திகளுக்கு இடம் கொடுக்க முடியாது.
மதுரையில் சில இடங்களில் நடக்கும் பிரச்னை தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை ஆறுதல் அளிக்கவில்லை. அடித்தவர் மீதும், அடி வாங்கியவர் மீதும் வழக்கு போடுவது நியாயமல்ல. தேர்தல் அரசியலை கருத்தில் கொண்டால் இதுபோன்ற போராட வேண்டிய தேவை இல்லை, படுகொலைகள், தாக்குதல்கள், பாலியல் பலாத்காரங்களை தடுக்க குரல் கொடுக்கிறோம்.
நாங்கள் சாதிய கட்சி அல்ல; ஜனநாயக கட்சி பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்போம். மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இடமில்லை. இதனை ராமதாஸ், அன்புமணி கண்டுபிடிக்கவில்லை, நாம்தான் கண்டுபிடித்தோம். அதில் வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றுள்ளோம். எங்கள் பார்வை சாதிய புத்தி அல்ல. எளிய மக்களுக்கான அம்பேத்கர், பெரியார், அண்ணாவை பின்பற்றுகிறோம். முத்துராமலிங்கத் தேவரின் நிகழ்ச்சியிலும் நான் பேசியுள்ளேன். என்னை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு தயக்கமே, தவிர எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
எந்த சமூகத்தையும், குறைத்தோ, எதிர்த்தோ பேசவில்லை. விசிக கொடிகம்பம் அதிக உயரத்திற்கு ஏற்றினால் போராட்டம் நடத்துகின்றனர்.பாமக தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கும் மனநிலையில் உள்ளனர். கட்சியினர் வற்புறுத்தினாலும், காவல்துறை அனுமதி இன்றி எங்கும் கொடியேற்றமாட்டேன். சில இடத்தில் கொடி ஏற்றுவதில் பிரச்சனை உருவாகும் என, தெரிந்தால் தொண்டர்களை கொடி ஏற்றச் சொல்வேன். வன்னிய சமூக மக்கள் ஒரு தூண்டுதலுக்கு ஆளாகின்றனர்.
தமிழகத்தில் காதல் திருமணங்களுக்கு நான் காரணம் என்கிறார்கள், எனது பிறப்பதற்கு முன்பாக காதல் திருமணங்கள் நடக்கவில்லையா? தர்மபுரி வன்முறை வெறியாட்டம் குறித்து பேசிய பிராமணர் அல்லாத, தலித் அல்லாத இயக்கம் என பிற்போக்கான முயற்சியை ராமதாஸ் முடிவெடுத்தார். என் தந்தையை போன்றவர் ராமதாஸ். தமிழகத்தில் சாதிய அமைப்புகளை அரசியல் கட்சியாக மாற்றியது ராமதாஸ் தான். சாதிய பிற்போக்கவாதிகளின் தந்தை, வழிகாட்டி ராமதாஸ்.
கருணாநிதியை சாதி பெயரை சொல்லி பேசும் அளவிற்கு தான் ராமதாஸின் அரசியல் இருந்தது, ராமதாஸ் கருணாநிதியை மேளக்காரன் என பேசுவார். ஜெயலலிதாவை அவள், இவள் என, பேசுவது தான் அவரது தன்மை. எங்கள் வெற்றிக்கு நீங்களே காரணம் என, என்னை அழைத்து பேசியவர் ராமதாஸ். அவர்மீது அதீத மதிப்பு வைத்திருத்தேன். தர்மபுரி கலவரத்திற்கு பின்புதான் ராமதாஸ் சாதிய ரீதியான எண்ணம் வெளிவந்தது; தெரிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.