பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே நீர் நிலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மண் அள்ளிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், அதை விடுமாறு திமுக எம்.எல்.ஏ, பட்டுக்கோட்டை டி.எஸ்.பியிடம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பட்டுக்கோட்டை அருகே திட்டக்குடி பகுதியில் உள்ள குளத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 20 அடிக்கு மேல் மணல் அள்ளப்பட்டதால் பட்டுக்கோட்டை போலீசார் அந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதை அறிந்த பட்டுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ அண்ணாதுரை, வாகனங்களின் சாவிகளை திரும்ப ஒப்படைக்குமாறு பேசியதாகவும் இதற்கு தாசில்தார் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் போலீசார் வாகனங்களின் சாவியை ஒப்படைக்க மறுத்ததாகவும் டி.எஸ்.பி கூறினால் மட்டுமே கொடுப்போம் என கறார் காட்டியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, எம்.எல்.ஏ அண்ணாதுரை பட்டுக்கோட்டை டி.எஸ்.பி பாலாஜியிடம் செல்போனில் பேசியுள்ளார். ஆனால், எம்.எல்.ஏ கூறியதை ஏற்காத டி.எஸ்.பி, வழக்கு பதியாமல் வாகனங்களை ஒப்படைக்க முடியாது என்று கூறினார்.
இதனால், எம்.எல்.ஏவுக்கும் டி.எஸ்.பி பாலாஜிக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான உரையாடல் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது. உரையாடலில் இடம் பெற்ற பேச்சுக்கள் பின்வருமாறு:-
திமுக எம்.எல்.ஏ அண்ணாதுரை: நான் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ பேசுகிறேன்..
டி.எஸ்.பி பாலாஜி: சொல்லுங்க சார்…
எம்.எல்.ஏ: ஒன்னும் இல்லை.. திட்டக்குடியில் மணல் அள்ளியிருக்கிறார்கள். எனக்கு தகவல் வந்ததும் உடனே நான் நிறுத்த சொல்லிவிட்டேன். தாசில்தார் வந்து ஸ்பாட்டில் நிறுத்த சொல்கிறார்.. நிறுத்தியிருங்க என சொல்லிவிட்டேன். சுமூகமாக முடிந்து விட்டது. இப்போ.. விதிமீறல் எதுவும் இல்லை.. இருந்தாலும் சோனல் டிடி போட்டது செல்லாது என்று தாசில்தார் சென்னாராம். ஆனாலும் தாசில்தார் சொன்னதால் ஒபே பண்ன வேண்டும் என்று சொல்லி மண் அள்ளுவதை எல்லாம் நிறுத்தியாச்சு… தாசில்தார் சரி என்று போய்விட்டார். ஆனால், எஸ்.ஐ, நீங்கள் சொன்னால்தான் சாவி கொடுப்போம் என்று சொல்கிறார்..
டி.எஸ்.பி: சார் அது வந்து மேட்டர் மேலே வரை போயிவிட்டது. நாங்கள் விட்டோம் என்றால் எங்கள் மேல் தப்பு வந்துடும். இரண்டாவது இரண்டு அடி மூன்று அடி எடுத்தால் பராவாயில்லை.. 20 அடி 25 அடி எடுத்துட்டு போறாங்க.. இது நாளைக்கு பிரச்சினையாகிவிடும். டேட் வேற எக்ஸ்பைரி ஆகிவிட்டது என்கிறார்கள்.
எம்.எல்.ஏ: ரெவினியூ அத்தாரிட்டி சொல்லுறாங்க.. தாசில்தார்கிட்ட கேட்டுக்கோங்க..எனக்கும் ரூல்ஸ் தெரியும். நானும் அட்வகேட்தான்.அதற்கு பிறகு என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை எடுங்க..அதெல்லாம் நான் விளக்கம் சொல்ல முடியாது. தாசில்தார் சொல்லிருக்கார்..நான் உங்க கிட்ட சொல்றேன்.நீங்க ஒபே பண்ணுங்க..இல்லை ஒபே பண்ணலன்னா பண்ணாதீங்க… நீங்க அத்தாரிட்டி கிடையாது. தாசில்தார்தான் அத்தாரிட்டி…
டி.எஸ்.பி: ஒபே பண்ண முடியாது சார்… கேஸ் போடுறோம்.. நீங்க பார்த்துக்கோங்க..
இவ்வாறு இருவரும் காரசாரமாக பேசுகின்றனர். இந்த உரையாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.