போபால்,
மத்தியபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்றமும் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்த தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் அதிரடி நடவடிக்கைளை மேற்கொள்ள உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மத்தியப்பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஜபல்பூரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:-
மத்தியப்பிரதேசத்தில் 220 மாத ஆட்சியில் 225 ஊழல்களை பாஜக அரசு செய்துள்ளது. தேர்தலில் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெறும் பாஜக, அதனை நிறைவேற்றுவதில்லை. பிரதமர் மோடியின் முறைகேடுகளை விட முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் ஊழல் பட்டியல் நீளமானது.
எங்கள் கட்சி (காங்கிரஸ்) என்ன வாக்குறுதிகளை அளித்ததோ, அவற்றை சத்தீஸ்கர் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் நிறைவேற்றியுள்ளோம். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிலையைப் பாருங்கள் உங்களுக்கே புரியும். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பல்வேறு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மத்திய பிரதேசத்தில் பாஜக தேர்தலின் போது அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள், ஆனால் நிறைவேற்றவில்லை. டபுள் எஞ்சின், டிரிபிள் எஞ்சின் என்று பேசுகிறார்கள். இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இதையேதான் சொல்கிறார்கள் ஆனால் அதற்கு பொதுமக்கள் சரியான பாடத்தை காட்டியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.