புதுடெல்லி: டெல்லியில் ராம் லீலா மைதா னத்தில் ஆம் ஆத்மி சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் பேசியதாவது: டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் அதிகாரங்களை பறிக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.
இது டெல்லி மக்களை அவமதிப்பது ஆகும். டெல்லியில் இனி சர்வாதிகார ஆட்சிதான். ஆளுநர்தான் உச்சபட்ச அதிகாரம் படைத்தவர். தேர்தலில் மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். ஆனால் மத்திய அரசுதான் டெல்லியை ஆட்சி செய்யும் என அச்சட்டம் கூறுகிறது.
நான் நாடு முழுவதும் பயணம் செய்து ஆதரவு கோரி வருகிறேன். டெல்லி மக்கள் தனியாக இருப்பதாக உணர வேண்டாம். நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் உங்களுடன் இருக்கிறார்கள்.
மத்திய அரசின் தாக்குதலுக்கு முதலில் பாதிக்கப்பட்டிருப்பது டெல்லி. வரும்காலத்தில் அவர்கள் பிற மாநிலங்களுக்கும் இதுபோன்ற அவசர சட்டத்தைக் கொண்டுவருவார்கள்.
டெல்லி மக்களுக்காக பணியாற்றுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி மூத்த தலைவர்களான மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நம்மிடம் 100 சிசோடியாக்களும் 100 ஜெயின்களும் உள்ளனர். அவர்கள் நற்பணிகளை தொடர்வார்கள். இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.