சென்னை: தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட உள்ளன.
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியருக்கு 10 கிராம் தங்கப் பதக்கம், ரூ.25,000 ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு 10 கிராம் தங்கப் பதக்கம்,ரூ.50,000 ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
அதேபோல, மாற்றுத் திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த மருத்துவர், சமூகப் பணியாளர், வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்து 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுகளுக்கான விண்ணப்ப படிவங்களை, ‘மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம், லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், சென்னை’ என்ற முகவரியிலோ, சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடமோ பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து வரும் ஜூன் 26-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் நேரிலோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். www.awards.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருதுகளை முதல்வர் வழங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.