சென்னை: “எங்கள் கட்சியின் சித்தாந்தத்தின்படி, பூத் ஏஜென்டாக இருப்பவர்கள்கூட மேலே வந்துவிடுவார்கள். முதல்வர் ஸ்டாலின் பாஜகவின் சித்தாந்தம் தெரியாமல் பேசுவது, அவருக்கு எந்தளவுக்கு அரசியல் தெரியவில்லை என்பதை மட்டும்தான் காட்டுகிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் .
சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் ரொம்ப அவசரப்படுகிறார் என்று தெரியவில்லை. நான்கு நாட்களாக அவசரப்பட்டு வருகிறார். அதற்கு காரணம் என்னவென்றால், முதல்வருக்கு பயம்.
அவரைத் தாண்டி, திமுகவின் தலைமைக்கு தலைவராக வருவதற்கு அவருடைய சகோதரி கனிமொழி தயாராகிவிட்டார்.
தமிழக முதல்வருக்கு ஒரே ஒரு சவால் விடுகிறேன். எங்களுடைய கட்சியில், அமித் ஷா கூறியதைப் போல, ஒரு பூத் கமிட்டி தலைவரைக்கூட உயர்த்தி, இந்தியாவின் எந்த பொறுப்பிலும் அமர வைப்போம். கோபாலபுரம் குடும்பத்தில் பிறந்தால் மட்டும்தான் உங்கள் கட்சியில் பொறுப்பு கொடுக்கப்படும்.
எனவே, முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஜனநாயகத்தை ஒரு கட்சி குழிதோண்டி புதைத்திருக்கிறது என்றால், அது திமுகதான். எங்கள் கட்சியின் சித்தாந்தத்தின்படி, பூத் ஏஜென்டாக இருப்பவர்கள்கூட மேலே வந்துகொண்டே இருப்பார்கள். எனவே, முதல்வர் பாஜகவின் சித்தாந்தம் தெரியாமல் பேசுவது, அவருக்கு எந்தளவுக்கு அரசியல் தெரியவில்லை என்பதை மட்டும்தான் காட்டுகிறது.
9 ஆண்டுகால ஆட்சியில், ஒரு அமைச்சர் குண்டூசியை திருடிவிட்டார் என்றுகூற முடியுமா? அலுவலகத்தில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்துச் சென்றார் என்று கூறமுடியுமா? அந்தளவுக்கு தூய்மையான அரசாங்கம் என்றால், வயிறு எரியத்தானே செய்யும். தமிழகத்தில் இரண்டாண்டு கால திமுக ஆட்சி ஊழலுக்கு பெயர் வாங்கி உள்ளது. அதனால்தானே நீங்கள் பால்வளத்துறை அமைச்சரை மாற்றினீர்கள்?” என்று அவர் கூறினார்.
முன்னதாக, 2 முறை தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பு பறிபோனதற்கு திமுக தான் காரணம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு தொடர்பான கேள்விக்கு, “வெளிப்படையாக இந்தக் கருத்தை அவர் கூறி இருந்தால் உரிய விளக்கம் அளிக்கப்படும். தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்ற கூறியது மகிழ்ச்சியாக உள்ளது. பிரதமர் மோடி மீது அமித் ஷாவுக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை. 2024ம் ஆண்டில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் உள்ளார்கள். ஒரு வேளை இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.