லண்டன்,
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 469 ரன்களும், இந்தியா 296 ரன்களும் எடுத்தன. அடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களுடன் ‘டிக்ளேர்’ செய்து இந்தியாவுக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் எட்டிராத இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி (44 ரன்), அஜிங்யா ரஹானே (20 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. வெற்றிக்கு மேற்கொண்டு 280 ரன்கள் தேவை என்ற உச்சக்கட்ட நெருக்கடியுடன் கோலி, ரஹானே தொடர்ந்து ஆடினர். இருவரும் மதிய உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்தால் இந்தியாவின் கை ஓங்கலாம் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் 7-வது ஓவரிலேயே இந்த ஜோடிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்ட் ‘செக்’ வைத்தார். அவர் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை கோலி (49 ரன், 78 பந்து, 7 பவுண்டரி) ‘டிரைவ்’ வகையில் அடிக்க முயற்சித்த போது, அது பேட்டின் விளிம்பில் பட்டு ‘ஸ்லிப்’ பகுதிக்கு எகிறியது. அதை பாய்ந்து விழுந்து ஸ்டீவன் சுமித் அருமையாக கேட்ச் செய்தார். அடுத்து வந்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (0) அதே ஓவரில் வீழ்ந்தார். அணியின் ஸ்கோர் 200-ஐ தாண்ட உதவிய ரஹானே (46 ரன், 108 பந்து, 7 பவுண்டரி) மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சிக்கினார். அத்துடன் இந்தியாவின் நம்பிக்கை முற்றிலும் சிதைந்தது.
மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக அடங்கிய இந்திய அணி 2-வது இன்னிங்சில் 63.3 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்து சாம்பியன் பட்டத்திற்குரிய கதாயுதத்தை தட்டிச் சென்றது. ஆஸ்திரேலிய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 4 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்ட் 3 விக்கெட்டும் சாய்த்தனர். முதல் இன்னிங்சில் 163 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
2021-ம் ஆண்டு முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த இந்தியாவுக்கு தொடர்ந்து 2-வது முறையாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 4 டெஸ்ட் தொடர்களை இந்தியா கைப்பற்றி இருந்த போதிலும், இங்கிலாந்து சூழலில் தாங்களே மிகச்சிறந்த அணி என்பதை ஆஸ்திரேலியா நிரூபித்து விட்டது.
இந்த வெற்றியை அடுத்து ஆஸ்திரேலியா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 4 வகையான கோப்பையையும் வென்ற முதல் அணி என்ற புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் ஆஸ்திரேலியா முத்தமிட்ட 9-வது ஐ.சி.சி. பட்டம் இதுவாகும். அந்த அணி ஏற்கனவே 50 ஓவர் உலகக் கோப்பையை 5 முறையும், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை 2 முறையும், 20 ஓவர் உலகக் கோப்பையை ஒரு தடவையும் வென்று இருக்கிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை சொந்தமாக்கிய ஆஸ்திரேலியாவுக்கு ரூ.13¼ கோடியும், 2-வது இடத்தை பெற்ற இந்தியாவுக்கு ரூ.6½ கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.
இந்தநிலையில், லண்டன் ஓவலில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவுக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதமும், ஆஸ்திரேலியாவுக்கு போட்டி கட்டணத்தில் 80 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் மெதுவாக பந்து வீசியதால் ஐசிசியின் போட்டி நடுவர் ரஞ்சன் மடுகலே இந்த அபராதத்தை விதித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2021 டிசம்பரில் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இதே தவறுக்காக போட்டி கட்டணத்தில் 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் கடைசி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் மெதுவாக ஓவர் ரேட் செய்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.