புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தொடர்ந்து கூறிவருகிறேன். இந்த ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி கவர்னருக்கும் முதல்வருக்கும் கோப்பு அனுப்பினார் தலைமைச் செயலாளர். ஆனால் கவர்னரும் முதல்வரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தலைமைச் செயலாளர் அந்தக் கோப்பை நேரடியாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார். அதன்பேரில் நிதித்துறைச் செயலர், கலால்துறை துணை ஆணையர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.5 கோடி கைமாறியிருக்கிறது.
உயர் பதவியில் இருப்பவர்கள் இதைப் பெற்றிருக்கின்றனர். இந்த ஊழல் குறித்து உண்மைகள் வெளிவர வேண்டுமென்றால் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். இதில் டெண்டர் விட்டதிலும் முறைகேடு நடந்திருக்கிறது. இதேபோல அங்கன்வாடிகள் மூலம் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவை டெண்டர் விடாமலேயே கடலூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு அளித்திருக்கின்றனர். இதிலும் பெரும் முறைகேடும் ஊழல்களும் நடந்திருக்கின்றன. புதுவையைச் சேர்ந்த ரௌடிகள், தமிழகப் பகுதிகளுக்குச் சென்று கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் முதல்வர் ரங்கசாமி கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார். என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் சொத்துக்குவிப்பில் கவனம் செலுத்திவருகின்றனர். கோயில் சொத்துகளை எம்.எல்.ஏ-க்கள் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க 40 சதவிகிதம் ஊழல் செய்தது. புதுவையில் பா.ஜ.க கூட்டணி 20 சதவிகித கமிஷன் பெறுகிறது. இது வரும்காலத்தில் 40 சதவிகிதமாக உயரும். கர்நாடக மாநிலத்தில் மேக்கேதாட்டூவில் அணை கட்டினால் தமிழக, புதுவை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதை புதுவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். ஆனால் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழுக்கு இடமில்லை. ஆனால் முதல்வர் ரங்கசாமி, தமிழை சி.பி.எஸ்.இ பாடத்தில் கட்டாயமாக்குவோம் எனச் சொல்லியிருக்கிறார். மத்திய அரசின் அனுமதியின்றி எப்படித் தமிழைக் கட்டாயப்படுத்த முடியும்?
வருவாய்த்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களைக் கையால் எழுதித் தருகின்றனர். இது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். ஆன்லைன் மூலம் சான்றிதழ்களை வழங்க வேண்டும். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.50,000 கோடிதான் நிதி அளிக்கப்பட்டது என்றும், தற்போது ரூ.2.5 லட்சம் கோடி பா.ஜ.க ஆட்சியில் வழங்கியிருப்பதாகவும் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. தமிழகத்திலிருந்து பெறப்படும் நிதியைத் திருப்பித் தந்துவிட்டு அமைச்சர் அமித் ஷா மார்தட்டியிருக்கிறார். குஜராத்துக்குக் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ரு.4 லட்சம் கோடி வழங்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்ற நிதி வழங்குவதாகக் கூறிவருகின்றனர்.
தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துவருகிறது என முதுகெலும்புள்ள முதல்வர் ஸ்டாலின் எதிர்த்துவருகிறார். ஆனால் புதுவை முதல்வர் தனது நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ள கைகட்டி சேவகம் செய்கிறார். புதுவைக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய பா.ஜ.க அரசு அளித்தது ரூ.250 கோடி நிதி மட்டும்தான். பா.ஜ.க பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறது. புதுவை மக்கள் இதை ஏற்க மாட்டார்கள். தமிழகத்திலும் புதுவையிலும் பா.ஜ.க-வுக்கு சமாதி கட்டுவார்கள். மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமைதி நிலவியது. ஏழு ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய வன்முறை இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. கர்நாடகத் தேர்தலுக்குப் பலமுறை பிரசாரம் செய்ய வந்த பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்லவில்லை.
கலவரம் தொடங்கிய 45 நாள்களுக்குப் பிறகு அமித் ஷா அங்கு சென்றிருக்கிறார். கலவரத்தை மத்திய, மாநில அரசுகள் அடக்க முடியாமல் வேடிக்கை பார்க்கின்றன. 60 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியில் ரூ.55 லட்சம் கோடி கடன்தான் இருந்தது. ஆனால் ஒன்பது ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில் கடன் தொகை ரூ.100 லட்சம் கோடி உயர்ந்து, ரூ.155 லட்சம் கோடியாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இந்தக் கடனை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பொதுத்துறை நிறுவனங்களை உயர்த்தவும் பயன்படுத்தினோம். ஆனால் பா.ஜ.க., பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கிறது. மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறது” என்றார்.