ஹிந்தி பிரபலங்களின் வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் நடிக்கும் பிரித்விராஜ்
நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அடுத்ததாக மோகன்லாலை வைத்து தான் இயக்க இருக்கும் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எல் 2 : எம்புரான் படத்திற்கான முன்கட்ட வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். அதே சமயம் இந்த வருடம் திடீரென எதிர்பாராத விதமாக பிரபாஸ் நடிக்கும் சலார் படத்திலும், பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிக்கும் படே மியான் சோட்டே மியான் என்கிற படத்திலும் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு தேடி வர மறுக்க முடியாமல் அவற்றை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரித்திவிராஜ் ஒப்பந்தமாகி உள்ளார். பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிக்கும் இந்த படத்தை பிரபல பாலிவுட் நடிகரான பொம்மன் இராணியின் மகன் கயோஸ் என்பவர் இயக்குகிறார். அதுமட்டுமல்ல நடிகர் சைப் அலிகானின் மகன் இப்ராஹிம் கான் இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படம் ஒரு எமோஷனல் திரில்லர் உருவாக இருக்கிறது.