சென்னை: தமிழகப் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியை உறுதி செய்வதே இந்தக் கல்வியாண்டிற்கான இலக்கு என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று (ஜூன் 12) திறக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மகளிர் பள்ளிக்குச் சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவிகளை பூங்கொத்து, சாக்கலேட் கொடுத்து வரவேற்றார்.பின்னர் மாணவிகளுக்கு புத்தகங்கள், புத்தகப்பை, சீருடை, காலணிகள் ஆகியனவற்றை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்த புதிய கல்வியாண்டில் ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஓர் இலக்கை நிர்ணயித்து செயல்படுவார்கள். 100 சதவீதம் தேர்ச்சி என்பதே இந்தக் கல்வியாண்டின் இலக்கு. புதிய கல்வியாண்டில் அடியெடுத்துவைக்கும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துகள்.
பொதுவாகவே பள்ளிகள் ஸ்டாண்டர்ட் ஆப்பரேட்டிங் மெசர்ஸ் என்பவற்றை பின்பற்றுவதை வலியுறுத்துகிறோம், அதன்படி குடிதண்ணீர், கழிவறைகள் தூய்மை, அங்கே தண்ணீர் விநியோகம், வளாகத் தூய்மை, நீர்த்தொட்டிகள் தூய்மை என மாணவர்கள் நலனுக்கான அனைத்தையும் உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளோம். மாணவர்களின் நலனே முக்கியம்.
இந்தக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பிற்கு 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். ஆகஸ்ட் வரை மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்படும் என்பதால் புதிதாக மாணவர் சேர்க்கை விவரம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
பஸ் பாஸ் பொருத்தவரை பள்ளிச் சீருடை அணிந்து வந்தாலே இலவசப் பயணத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. இருப்பினும் இதுதொடர்பாக போக்குவரத்துத் துறையிடம் பேசுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.