பொகட்டா: கொலம்பிய விமான விபத்தில் உயிர் பிழைத்து, அமேசான் வனப்பகுதியில் 40 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட நான்கு குழந்தைகள், விதைகள், வேர்கள் மற்றும் தாவரங்களை உண்டு உயிர் வாழ்ந்த அதிசயம் தற்போது வெளிவந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இருந்து, சிறிய ரக விமானம், மே 1ம் தேதியன்று புறப்பட்டது. இதில் விமானி, ஒரு பெண், அவரது நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் பயணித்தனர். அந்த விமானம், கொலம்பியாவில் உள்ள அமேசான் வனப்பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது, இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, வனப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது.
அடர்ந்த வனப்பகுதி என்பதால், நொறுங்கிய விமானத்தை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. விமானத்தை தேடும் பணியில், 100 கொலம்பிய வீரர்களுடன், வனப்பகுதியை நன்கு அறிந்த கொலம்பிய பழங்குடி மக்களின் தேசிய அமைப்பின் தன்னார்வலர்கள் 80 பேர் ஈடுபட்டனர்.
இந்த மீட்பு பணிக்கு, ‘ஆப்பரேஷன் ஹோப்’ என, பெயரிடப்பட்டது. இரவு பகலாக தேடுதல் வேட்டை நடந்த நிலையில், விபத்து நடந்து 40 நாட்களுக்கு பின் அந்த விமானம் கண்டறியப்பட்டது. அதில் பயணித்த விமானி மற்றும் பெண் உட்பட மூவரின் உடல்கள் மீட்கப்பட்டன. அந்த பெண்ணின் 11 மாத குழந்தை மற்றும் நான்கு வயதான குழந்தை உட்பட நான்கு குழந்தைகளும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இது குறித்து ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், அந்த குழந்தைகள், 40 நாட்களாக அடர்ந்த காட்டுக்குள் எப்படி தப்பி பிழைத்தனர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இது குறித்து, கொலம்பிய பழங்குடி மக்களின் தேசிய அமைப்பை சேர்ந்த தன்னார்வலர் லுாயிஸ் அகோஸ்டா கூறியதாவது: தாயின் வயிற்றில் துவங்கி கற்பிக்கப்படும் இயற்கை சூழலுடனான அறிவும், உறவுமே இந்த குழந்தைகள் இன்று உயிர் வாழ காரணமாக அமைந்துள்ளது.
அதையும் தாண்டி இந்த குழந்தைகளுக்குள் ஓர் ஆன்மிக சக்தி உள்ளது. அதுவே அவர்கள் உயிர் வாழ ஊக்கப்படுத்தி இருக்க வேண்டும். இந்த குழந்தைகள் சுற்றுச்சூழல் குறித்த அறிவை இயற்கையாகவே கிடைக்க பெற்றுள்ளனர்.
எனவே தான், வனத்தில் கிடைக்கும் விதைகள், வேர்கள், தாவரங்களை தேடி சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளனர். மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை உணவு குறித்து அவர்களுக்கு அடிப்படையாக நல்ல புரிதல் இருந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்