புதுடெல்லி: “பிப்பர்ஜாய் புயலால் பாதிப்பக்கபடும் பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை மீட்பு படையினர் உறுதி செய்துள்ளார்கள்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரபிக் கடலில் அதி தீவிரம் கொண்டுள்ள பிப்பர்ஜாய் புயல் வரும் வியாழக்கிழமை குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதிக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை அதிகம் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப் புயலினால் இந்தியப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த உயர்நிலை மதிப்பாய்வு கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
“புயலால் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் பத்திரமாக வெளியேற்றப்படுவதை மீட்பு படையினர் உறுதி செய்துள்ளனர். அதேபோல் அத்தியாவசிய தேவைகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மக்களும் நலமுடனும் பாதுகாப்புடனும் இருக்க பிரார்த்தனை செய்வோம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் தலைமையிலான ஆய்வு கூட்டம் பற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநில அரசால் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், மின்சாரம், தகவல் தொடர்பு, சுகாதாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் பராமரிக்கப்படுவதையும், அதில் பாதிப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்வதையும் உறுதி செய்யவேண்டும். அனைத்து விலங்குகளும் பாதுகாக்கப்படுவதையும், 24 மணிநேரமும் கட்டுப்பாட்டு அறைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
உள்துறை அமைச்சகம் 24 மணிநேரமும் நிலைமை கண்காணித்து மாநில அரசு மற்றும் சம்மந்தப்பட்ட துறைகளுடன் தொடந்து தொடர்பில் இருந்து வருகிறது. படகுகள், மரம் வெட்டும் இயந்திரங்கள், தகவல் தொடர்பு சாதனங்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படைகளின் 12 குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும் 15 குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்காக இந்திய கடற்கரை மற்றும் கடலோர காவல் படைகளின் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்திய விமானப் படை, ராணுவ பொறியியல் பணிக்குழு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலோரத்தில் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் ராணுவம், கடற்படை, மற்றும் கடலோர காவல் படைகளின் மருத்துவக் குழு, பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயலை எதிர்கொள்வதற்காக மாநில அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமரிடம் விளக்கப்பட்டது.
மாநில அளவில், முதல்வர் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தினருடன் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அவசர சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் மாநிலத்தின் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமரின் தலைமைச் செயலர் பி.கே.மிஸ்ரா, கேபினட் செயலர் ராஜீவ் கவுபா, புவி அறிவியல் செயலாளர் எம்.ரவிச்சந்திரன், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கமல் கிஷோர் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் மொகபகத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜூன் 15-ம் தேதி பிப்பர்ஜாய் புயல் சவுராஷ்டிரா மற்றும் கட்ச், மாண்ட்வி மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே குஜராத்தின் ஜக்கு போர்ட் அருகே அதிதீவிர சூறவாளியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.