உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருந்தது. இதன் மூலம் 2013 க்குப் பிறகு இந்திய அணி ஐ.சி.சி கோப்பைகளை வெல்லவே இல்லை என்கிற சோக வரலாறும் தொடர்கிறது. இந்நிலையில், சமூகவலைதளங்கள் முழுவதும் ரசிகர்கள் தோனியை புகழ்ந்து எழுதி வருகின்றனர்.
இப்போதைய வீரர்கள் ஒரு கோப்பையை வெல்லவே தடுமாறும்போது தோனி ஒற்றை ஆளாக மூன்று கோப்பைகளை வென்று கொடுத்தார் என்பது ரசிக கருத்துகளின் அடிப்படையாக இருக்கிறது. இப்படியாக ரசிகர் ஒருவர் தோனி குறித்து பதிவிட்டிருந்த ட்வீட் ஒன்றிற்கு ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்திருக்கிறார்.
2007 உலகக்கோப்பை வெற்றியைக் குறிப்பிட்டு, ‘அப்போது அந்த அணிக்கு பயிற்சியாளர் கூட இல்லை. அனுபவ வீரர்கள் ஆடுவதற்கே முன் வரவில்லை. அப்படி ஒரு சூழலில் முழுக்க முழுக்க இளம் வீரர்களை மட்டுமே கொண்டு ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தி தோனி உலகக்கோப்பையை வென்று கொடுத்தார்.’ என அந்த ரசிகர் பதிவிட்டிருந்தார்.
அந்த ட்வீட்டை மேற்கோள்காட்டி ஹர்பஜன் சிங் பதிவிட்டிருக்கும் பதில் ட்வீட்டில், ‘ஆம், இந்த இளம் வீரர் தன்னந்தனியாக ஆடிதான் உலகக்கோப்பையை வென்றார். அணியிலிருந்த மற்ற 10 வீரர்களும் ஆடவே இல்லை. எவ்வளவு பெரிய முரண் இது?
ஆஸ்திரேலியாவோ அல்லது வேறு சில நாடுகளோ உலகக்கோப்பையை வெல்லும்போது, ஆஸ்திரேலிய தேசம் உலகக்கோப்பையை வென்றதாக செய்தி எழுதுவார்கள். ஆனால், இந்தியா உலகக்கோப்பையை வென்றால் கேப்டன்தான் வென்றார் என எழுதுவார்கள். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. இங்கே குழுவாகத்தான் வெற்றி தோல்விகளை எட்ட வேண்டும்.’ என பதிலளித்திருந்தார்.
இதே மாதிரியான ஒரு கருத்தைதான் கவுதம் கம்பீரும் பேசியிருக்கிறார். ‘நாம் அணியை விட தனிமனிதர்களைத்தான் அதிகம் கொண்டாடுகிறோம். 1983 உலகக்கோப்பையின் அரையிறுதியிலும் இறுதியிலும் மொகிந்தர் அமர்நாத் தான் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். ஆனால், கபில்தேவ் உலகக்கோப்பையை தூக்கிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு புகைப்படம்தான் நமக்கு காட்டப்படுகிறது. அதுதான் நம்முடைய மனதிலும் பதிந்திருக்கிறது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்த நிலைமை இல்லை. அவர்கள் தனிமனிதர்களை விட அணிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.’ எனக் கூறியிருக்கிறார்.
தனிமனிதர்களை விட அணிதான் முக்கியம் என்கிற கவுதம் கம்பீர் மற்றும் ஹர்பஜனின் கருத்துக்களை பற்றிய உங்களின் எண்ணங்களை கமெண்ட் செய்யுங்கள்.