Doctor Vikatan: ஓட்ஸ் சாப்பிடுவது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது…. அதில் உண்மையிலேயே சத்துகள் உள்ளனவா…. ஓட்ஸை எப்படிச் சாப்பிடுவது சிறந்தது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் புவனேஸ்வரி
மற்ற தானியங்களோடு ஒப்பிடுகையில் ஓட்ஸில் ஊட்டசத்துகள் அதிகம் என்பதில் சந்தேகமில்லை. அதில் வைட்டமின்கள், தாதுச்சத்துகள், மற்றும் பீட்டா குளுக்கன் (beta-glucans) எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தும் அதிகம் இருக்கிறது. அந்த நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதால், குடல் செயல்பாடுகள் சீராக இருக்கும். ஓட்ஸை காலை உணவாகவோ, முற்பகல் உணவாகவோ எடுத்துக்கொள்ளலாம்.
கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், நீண்ட நேரம் பசி உணர்வு ஏற்படாமல் வைத்து, எடைக்குறைப்புக்கும் இது உதவுகிறது. தவிர இது உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் வாங்கும்போது ஸ்டீல் கட் ஓட்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளதைப் பார்த்து வாங்க வேண்டும். அது ஒரிஜினலானது, பதப்படுத்தப்படாதது. இது அளவில் சற்றே பெரிதாக இருக்கும். சமைப்பதற்கு சற்று அதிக நேரம் எடுக்கும்.
அடுத்தபடியாக ரோல்டு ஓட்ஸ் பயன்படுத்தலாம். இது ஆவியில் வைக்கப்பட்டு, தட்டையாக்கப்பட்டு பாதி சமைத்த பக்குவத்தில் கிடைக்கும். அதனால் இது மென்மையாக இருக்கும். இதற்கடுத்தபடியாக குவிக் ஓட்ஸ். இது மேலும் பதப்படுத்தப்பட்டது. இது இன்னும் சன்னமாக இருக்கும். எனவே இதைச் சட்டென சமைத்துவிடலாம். ஓட்ஸில் பொதுவாக குளுட்டன் இருக்காது. அதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவும் குறைவு. அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.
ஓட்ஸ் ஆரோக்கியமற்ற உணவா என்றால் நிச்சயம் இல்லை. இன்றைய அவசர யுகத்தில் பலருக்கும் சமைப்பதற்குப் பொறுமையோ, நேரமோ இருப்பதில்லை. அவர்களுக்கு ஓட்ஸ் நிச்சயம் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
பாலிஷ் செய்யப்பட்ட பிற தானிய உணவுகளை எடுத்துக்கொள்வதற்கு பதில் பாலிஷ் செய்யப்படாத ஓட்ஸ் சாப்பிடுவது நிச்சயம் ஆரோக்கியமானதுதான். மற்ற தானியங்களைச் சமைக்க ஆகும் நேரத்தைவிட சீக்கிரமாக, எளிதாக ஓட்ஸை சமைத்துவிட முடியும். இதில் சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை. நறுக்கிய பழங்கள், பால் சேர்த்துச் சாப்பிடலாம். அது பிடிக்காதவர்கள் ஓட்ஸையே காய்கறிகள் சேர்த்து உப்புமா மாதிரியும் சமைத்துச் சாப்பிடலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.