நியூ ஜெர்சி :பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்வதையொட்டி நியூ ஜெர்சியில் உள்ள ஒரு இந்திய உணவகத்தில் மூவர்ண கொடி நிறத்திலான இட்லி உட்பட பல்வேறு இந்திய உணவு வகைகள் அடங்கிய ‘மோடிஜி மீல்ஸ்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21ல் அமெரிக்கா செல்கிறார். அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அளிக்கும் இரவு விருந்தில் ஜூன் 22ல் பங்கேற்கும் மோடி அமெரிக்க பார்லிமென்ட் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அடுத்து இந்திய வம்சாவளியினர் மற்றும் அமெரிக்க பெருநிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் பேசுகிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் மோடிஜி தாளி எனப்படும் மோடிஜி மீல்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்திய வம்சாவளியான ஸ்ரீபாத் குல்கர்னி என்ற சமையல் கலை நிபுணர் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். அவர் உருவாக்கியுள்ள மோடிஜி மீல்ஸ் பட்டியலில் மூவர்ண கொடி நிறத்தில் இட்லி கிச்சடி ரசகுல்லா சர்சன் கா சாக் காஷ்மீரி தம் ஆலு டோக்லா சாச் அப்பளம் உட்பட பல்வேறு இந்திய உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று 2023ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளதை மனதில் வைத்து பெரும்பாலான உணவு வகைகள் சிறுதானியங்களில்
செய்யப்பட்டுள்ளன.இது குறித்து உணவகத்தை நடத்தி வரும் ஸ்ரீபாத் குல்கர்னி கூறியதாவது:மோடிஜி மீல்ஸ் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என நம்புகிறேன். இதை தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மீல்ஸ் அறிமுகப்படுத்தும் திட்டமும் உள்ளது.
இவருக்கும் அமெரிக்க இந்திய வம்சாவளியினர் இடையே பெரும் செல்வாக்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement