சென்னை: Maaveeran (மாவீரன்) மாவீரன் படத்தில் இடம்பெற்றிருக்கும் வண்ணாரப்பேட்டையில பாடல் ஜூன் 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பிறகு மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் என அவர் நடித்த இரண்டு படங்கள் வரிசையாக நூறு கோடி ரூபாய் வசூலித்த சூழலில் பிரின்ஸ் அடைந்த தோல்வி பேசுபொருளானது. எனவே மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாவீரன் படத்தின் மூலம் விட்டதை பிடிக்க முனைப்போடு இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மண்டேலா மடோன் அஸ்வின்: மடோன் அஸ்வின் மண்டேலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். யோகிபாபுவை வைத்து காமெடியுடன் சமூக அக்கறையுள்ள விஷயத்தை அந்தப் படத்தில் பேசி கவனம் ஈர்த்த அவர் அப்படத்துக்காக தேசிய விருதையும் வென்றார். எனவே மடோன் அஸ்வின் நிச்சயம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருவார் என பலர் கணித்திருக்கின்றனர். இயக்குநர் மிஷ்கினும் மடோன் அஷ்வினை வெகுவாக பாராட்டியிருக்கிறார்.
மாவீரன் ரிலீஸ்: மாவீரன் படம் முதலில் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ரிலீஸாகவுள்ளது. எனவே மாவீரன் படம் ஒரு மாதம் முன்னதாக அதாவது ஜூலை மாதம் 14 தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவித்தது.
டப்பிங் பணி நிறைவு: மாவீரன் படத்தின் ஷூட்டிங் முடிந்த கையோடு கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு சென்றார் சிவா. அந்தப் படத்தில் ராணுவ வீரராக அவர் நடிக்கிறார் என கூறப்படும் சூழலில் ஜிம்மில் பயங்கரமாக ஒர்க் அவுட் செய்து வேறு லுக்கில் வலம் வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில்தான் மாவீரன் படத்துக்கான டப்பிங் பணியை முடித்தார்.
செகண்ட் சிங்கிள்: இந்நிலையில் மாவீரன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தில் இடம்பெற்றிருக்கும் வண்ணாரப்பேட்டையில என்ற பாடல் 14ஆம் தேதி ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் இயக்குநர் மடோன் அஷ்வினும், இசையமைப்பாளர் பரத் சங்கரும் அதிதி ஷங்கருக்கும், சிவகார்த்திகேயனுக்கு தொலைபேசியில் பேசுவது போலும், இருவரும் ஸ்டூடியோவுக்கு வந்து பாடல் பாடுவதற்கு தயாராகும்படியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வண்ணாரப்பேட்டையிலே என்று தொடங்கும் அந்தப் பாடலை யுகபாரதி எழுதியிருக்கிறார். அதிதி ஷங்கர் ஏற்கனவே விருமன் படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Vannarapettayila from 14.06.2023! #MaaveeranSecondSingle#Maaveeran #VeerameJeyam pic.twitter.com/k2HrsT4kZu
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 12, 2023
ரெட் ஜெயண்ட் கையில் மாவீரன்: இதற்கிடையே, மாவீரன் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுவதற்கான உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது. ரெட் ஜெயண்ட் உள்ளே வந்திருப்பதன் காரணமாக மாவீரன் ரிலீஸிலோ, அதற்கு திரையரங்குகள் கிடைப்பதிலோ எந்தவிதமான சிக்கலும் வராது என்று நம்பலாம்.