சென்னை : விஜய் டிவியின் முக்கியமான விவாத நிகழ்ச்சியாக காணப்படுகிறது நீயா நானா ஷோ. வாரந்தோறும் வித்தியாசமான தலைப்புகளை விவாதங்களை மேற்கொண்டு வருகிறது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக தொடர்ந்துவரும் இந்தத் தொடரின் வெற்றிக்கு நிகழ்ச்சியின் ஆங்கர் கோபிநாத்தும் முக்கியமான காரணமாக அமைந்துள்ளார்.
இந்த வாரம் நீண்ட கூந்தல் கொண்டவர்கள் மற்றும் ஷார்ட் ஹேர் கொண்டவர்களை கொண்டு சுவாரஸ்யமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த வார நீயா நானா ஷோவின் சுவாரஸ்யம் :விஜய் டிவியின் சூப்பர் விவாத நிகழ்ச்சியாக நீயா நானா கடந்த 10 ஆண்டுகளை கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்தத் தொடரின் மற்றொரு சுவாரஸ்யம் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கோபிநாத். நிகழ்ச்சியில் இருதரப்பினரின் விவாதங்கள், அவரவர் தரப்பு நியாயங்கள், பிரச்சினைகளை அழகாக வெளிப்படுத்தி, இருவரும் அடித்துக் கொள்ளாத வகையில் நிகழ்ச்சியை சுமூகமாக எடுத்துச் செல்லும் கலை கோபிநாத்திற்கு இயல்பாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான, சுவாரஸ்யமான, சமூக அக்கறையை முன்னிருத்தும் வகையிலான தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி விவாதங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் சுவாரஸ்யமான தலைப்பையே கோபிநாத் எடுத்துக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டின் நீள கூந்தலுடைய பெண்கள் மற்றும் நீள கூந்தல் தேவையில்லாதது என்று கூறும் பெண்கள் என இந்த வார தலைப்பு அமைந்திருந்தது.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் நீண்ட கூந்தலுடைய பெண்கள் ஒவ்வொருவராக வந்து, தங்களுடைய கூந்தலை மற்றவர்களை கவரும் வகையில் எப்படி வெளிப்படுத்துவார்கள் என்பதை சுவாரஸ்யமாக வெளிப்படுத்தினர். அந்த வகையில், தன்னுடைய கால்வரை நீண்ட கூந்தலை, முன் பக்கமாக இழுத்துவிட்டுக் கொண்டு, துப்பட்டாவை போல பயன்படுத்துவேன் என்று ஒரு பெண் தெரிவித்தார். அவரை பார்ப்பவர்கள், முடியா, துப்பட்டாவா என குழம்புவார்கள என்றும் அவர் கூறியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே நீண்ட கூந்தலை பராமரிப்பது மிகவும் சிரமமானது என்றும் அதனால் நேர விரயம் ஏற்படும் என்றும் அவர்கள் பராமரிப்பதற்காக அதிகமாக செலவழிக்க வேண்டியது இருக்கும் என்றும் ஷார்ட் ஹேர் கொண்டவர்கள் தெரிவித்தனர். மேலும் ஷார்ட் ஹேர்தான் தன்னை வலிமையாக உணர செய்வதாகவும் ஒரு பெண் தெரிவித்தார். ஆனால் நீண்ட கூந்தலை கொண்டவர்களோ, தினமும் அரை மணிநேரம் செலவிட வேண்டியது இருக்கும் என்றும் சில நூறுகளில்தான் செலவு இருக்கும் என்றும் கூறினார். ஆனால் ஷார்ட் ஹேர் கொண்டவர்கள், கலரிங், அது இது என்று பார்லருக்கு அதிகமாக செலவிட வேண்டும் என்றும் அவர்கள் கூறியது நியாயமாகவே இருந்தது.
இந்நிலையில் டெர்மடாலஜி மருத்துவர் ரெனிடாவும் நீண்ட கூந்தல் மற்றும் ஷார்ட் ஹேர் குறித்து சில விளக்கங்களை அளித்தார். கடந்த 30 வருடங்களுக்கு முன்பு பெண்களுக்கு கவர்ச்சியாக நீண்ட தலைமுடி பார்க்கப்பட்டது, ஆனால் தற்போது, சிறிய தலைமுடியை வைத்திருக்கும் பெண்கள்தான் கவர்ச்சிகரமாக பார்க்கப்படுவதாகவும் நீண்ட தலைமுடி கொண்டவர்கள் வலிமையான பெண்ணாக பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் 12 இன்ச்சிற்குள் உள்ளவர்கள்தான் ஷார்ட் ஹேர் வகையராவில் வருவார்கள் என்பதால், ஷார்ட் ஹேர் கேட்டகரியில் அமர்ந்திருப்பவர்களில் பாதி பேர், நீண்ட கூந்தல் கேட்டகரியில் அமர வேண்டியவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே அந்தப் பக்கம் அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் மிக நீண்ட கூந்தலை உடையவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஆண்களுக்கான ஹார்மோன்கள் பெண்களிடையே அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.