ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் நடந்த, காந்தி – கிங் மண்டேலா சர்வதேச மாநாட்டில், புதுடில்லியைச் சேர்ந்த வல்லபி செல்லம் அண்ணாமலையின் பரதநாட்டிய நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
தென் ஆப்ரிக்காவில் உள்ள பீட்டர்மார்டிஸ்பர்க் என்ற இடத்தில், காந்தி – கிங் மண்டேலா சர்வதேச மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 400க்கும் அதிகமான பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டின் போது, புதுடில்லியைச் சேர்ந்த வல்லபி செல்லம் அண்ணாமலையின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. புதுடில்லியில் உள்ள காந்தி தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குனரான அழகன் அண்ணாமலையின் மகளான வல்லபி, கடந்த 20 ஆண்டுகளாக நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
மஹாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த, ‘வைஷ்ணவ ஜன தோ’ என்ற பஜனை பாடலுக்கு மிக அற்புதமாக அபிநயம் பிடித்து அவர் ஆடியது, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இது குறித்து வல்லபி செல்லம் கூறியதாவது:
என் பெற்றோர் இருவருமே தீவிர காந்தியவாதிகள் என்பதால், இந்த பாடலுக்கு நாட்டியம் அமைப்பது எனக்கு சிரமமாக இல்லை.
தென் ஆப்ரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, 1893, ஜூன் 7ம் தேதி ரயிலில், வெள்ளையர்களுக்கான பெட்டியில் பயணம் செய்ததற்காக, இதே பீட்டர்மார்டிஸ்பர்க் ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டார்.
அதன் பின், ஒடுக்குமுறைக்கு எதிராக தென் ஆப்ரிக்காவிலும், இந்தியாவிலும் போராட்டத்தை துவங்கினார். அவர் மஹாத்மா காந்தியாக மாறுவதற்கு ஆதாரமாக அமைந்த அதே இடத்தில், அந்த நாளையொட்டி இந்த பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்தியதை பெருமையாகக் கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement