சென்னை: அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள போர் தொழில் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. .
முதல் நாளிலேயே பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால் வார இறுதிநாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.
இதனால், போர் தொழில் படத்தின் முதல் வார பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கோலிவுட்டையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.
போர் தொழில் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ்:அசோக் செல்வன், சரத்குமார், சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் போர் தொழில். விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படம் கடந்த வாரம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன.
இதனால், 9ம் தேதி இரவு காட்சிக்கு ரசிகர்கள் அதிகளவில் கூடினர். மேலும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளுக்கான ரிசர்வேஷனும் அதிகமாகின. மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன் இல்லையென்றாலும் ரசிகர்களின் விமர்சனங்கள் மூலம் மட்டும் அதிக கவனம் ஈர்த்தது போர் தொழில். இருப்பினும் முதல் நாளில் 95 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்தது.
ஆனால், சனி கிழமை முதல் ஸ்க்ரீன்களின் எண்ணிக்கை அதிகமானதால் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் மாஸ் காட்டத் தொடங்கியது. அதன்படி, இரண்டாவது நாளில் மட்டும் 2.50 கோடி வரை வசூலித்து கெத்து காட்டியது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று பாக்ஸ் ஆபிஸ் வசூல் இன்னும் இரண்டு மடங்காகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆனது.
மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் 3 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. முதல் நாளில் 95 லட்சத்தில் தொடங்கி, இரண்டாவது நாளில் 2.50 கோடி, மூன்றாவது நாளில் 3 கோடி ரூபாய் என வசூலில் மிரட்டியுள்ளது. ஆகமொத்தம் முதல் 3 நாட்களில் 6.50 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். இதனால், போர் தொழில் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தொடர்ந்து இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருப்பதால், இனி வரும் நாட்களிலும் கலெக்ஷன் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. போர் தொழில் படத்தின் மொத்த பட்ஜெட் 12 கோடி இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டாடா, குட்நைட் படங்களைத் தொடர்ந்து மினிமம் பட்ஜெட்டில் சூப்பர் ஹிட் அடித்துள்ளது போர் தொழில். மேலும் தமிழில் ஒரு தனித்துவமான க்ரைம் திரில்லர் படமாகவும் உருவாகியுள்ளது.
திருச்சி பகுதியில் இளம்பெண்கள் சிலர் அடுத்தடுத்து ஒரேமாதிரியாக கொலை செய்யப்படுகின்றனர். அதன் பின்னணி என்ன, யார் கொலையாளி என்பதை கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை. சீனியர் போலீஸ் ஆபிஸரான சரத்குமாரும் புதிதாக வேலைக்கு சேர்ந்த அசோக் செல்வனும் இணைந்து கொலையாளியை கண்டுபிடிப்பதை மிரட்டலாக இயக்கியுள்ளார் விக்னேஷ் ராஜா. இயக்குநருக்கு இதுதான் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.