எம்டன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முதலாம் உலகப் போரில் பயன்பட்ட ஜெர்மனியின் ஒரு பிரபல போர்க்கப்பலின் பெயர் எஸ்.எம்.எஸ். எம்டன் (SMS Emden). 1909ல் ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட இதற்கு வடமேற்கு ஜெர்மனியில் உள்ள எம்டன் என்ற நகரின் பெயர் வைக்கப்பட்டது. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சுற்றி உள்ள கடல் பகுதியில் கண்காணிப்பை இது நிகழ்த்தியது.
முதலாம் உலகப் போர் தொடங்கியபோது இது பசிபிக் பெருங்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் கார்ல் வான் முல்லர் (Karl von Müller). அடுத்த சில மாதங்களில் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் இது செயல்படத் தொடங்கியது. இது அலை வீசும் கடலிலும் வெகு வேகமாகச் செல்லக்கூடியது. இதில் 20 பீரங்கிகள் பொருத்தப்பட்டு அவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பல எதிரி நாட்டுக் கப்பல்களை இது நாசப்படுத்தியது. இதன் மிக முக்கியமான தாக்குதல் சென்னையிலும் (மெட்ராஸ்) நிகழ்ந்தது.
1914 ஆகஸ்ட் இறுதியில் இந்தக் கப்பல் இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்தது. அதற்கு முன்னதாக தனது கொடியை இடத்திற்குத் தகுந்தமாதிரி மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாகப் பல துறைமுகங்களில் தனக்கு வேண்டிய எரிபொருளைப் பெற்றது.
செப்டம்பர் 22 1914 அன்று சென்னை கடற்கரையை இது நெருங்கியது. இரவு 10 மணிக்கு சென்னை துறைமுகத்தில் நுழைந்தது. அப்போது ஜெகஜோதியாக சென்னை துறைமுகம் ஒளிவிளக்குகளோடு மின்னியது. அங்குத் தனது பீரங்கி குண்டுகளை ஏவியது. மொத்தம் 13 முறை இது குண்டு வீச்சுகள் நிகழ்த்தியது (இந்தியாவை அப்போது ஆண்ட பிரிட்டிஷருக்கு அறைகூவல் விட்ட செயல் இது). இரண்டு பெட்ரோலிய டாங்க்குகளை எம்டன் அழித்தது. மூன்று பெட்ரோலிய டாங்க்குகளுக்கு சேதம் விளைவித்தது. துறைமுகத்தில் நின்றிருந்த ஒரு வணிக கப்பலைப் பாதித்தது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை உயர்நீதிமன்றம் ஆங்கிலேயருக்குச் சொந்தமான பர்மா ஷெல் பெட்ரோலிய டாங்க்குகள் போன்றவற்றின் மீது மேற்படிப் போர்க் கப்பல் வீசிய பீரங்கி குண்டுகள் அழிவை ஏற்படுத்தின. இப்படிப் பல பாதிப்புகளை ஏற்படுத்திய எம்டன் பெரும் தீவிபத்திலிருந்து தப்பித்து வெளியேறியது.
பிறகு பினாங்க் சென்ற அது ஒரு ரஷ்யப் போர்க்கப்பலை மூழ்கச் செய்தது. அப்படியே ஒரு பிரென்சு போர்க்கப்பலையும் பதம்பார்த்தது. பிறகு கோகோஸ் தீவுகளை அடைந்தபோது ஆஸ்திரேலிய போர்க் கப்பலான சிட்னி (HMAS Sydney) இதை எதிர்கொண்டது. இரு கப்பல்களின் கடற்படை வீரர்களுக்கிடையே பல மணி நேரத்துக்குக் கடுமையான சண்டை நிகழ்ந்தது. இதில் எம்டன் பலத்த பாதிப்புக்கு உள்ளாகியது.
நவம்பர் 10 அன்று அதன் சகாப்தம் முடிவுக்கு வந்தது. அது கரை ஒதுங்கியது. பதினைந்து கப்பல்களை அழித்த சாதனைப் பட்டியலுடன் எம்டன் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டது. எம்டன் குழுவைச் சேர்ந்த பலரும் இந்தப் போரில் உயிர் தப்பினர். அவர்களை பிரிட்டிஷ் அரசு கைது செய்தது. கேப்டன் முல்லர் வேறு சில அதிகாரிகளோடு ஒரு சிறிய படகில் ஏறித் தப்ப முயன்றார். அவர்களை நெதர்லாந்து ராணுவம் கைது செய்தது.
எனினும் இன்று வரை ஜெர்மன் மக்களுக்கிடையே எம்டன் என்ற போர்க் கப்பலின் சாகசங்கள் சிலிர்ப்போடு பேசப்படுகின்றன. அதன் கேப்டன் முல்லர் ஒரு கதாநாயகராகக் கருதப்படுகிறார். இத்தனைக்கும் எம்டனை ஒரு பிரமாண்டமான போர்க்கப்பல் என்று கூறி விட முடியாது. பல நூல்களும் திரைப்படங்களும் எம்டன் குறித்து வெளிவந்துவிட்டன. பிற்காலத்தில் ஜெர்மனி கடற்படை தனது பல போர்க்கப்பல்களுக்கு எம்டன் என்ற பெயரை விதவிதமான சிறிய பின்னொட்டுகளோடு வைத்து மகிழ்ந்தது.
எம்டன் என்ற போர்க் கப்பல் முடிவுக்கு வந்துவிட்டாலும் எம்டன் என்ற வார்த்தை தமிழகத்தில் இன்று வரை தொடர்கிறது. சத்தம் போடாமல் வந்து பெரிய பெரிய வேலைகளைச் செய்பவரை எம்டன் என்று அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
முதலாம் உலகப் போர் தொடர்பான மற்றொரு குறிப்பிடத்தக்கப் போர்க்கப்பல் HMS ட்ரெட்நாட் (Dreadnought). அதன் பெயரே உணர்த்துவது போல் அது ஒரு பிரிட்டிஷ் போர்க்கப்பல் (Her Majesty’s Ship என்பதன் சுருக்கம்தான் HMS). 1906-ல் உருவாக்கப்பட்ட இது மிகச்சிறந்த பொறியியல் நுட்பம் கொண்டது. (இதைத்தொடர்ந்து சிறந்த போர்க்கப்பல்களின் பெயர்களை எல்லாம் ட்ரெட்நாட் என்று அழைக்கத் தொடங்கினர்).
ஜெர்மனிய நீர்மூழ்கிக் கப்பலான SM U-29 என்பதை இது தாக்கி செயலிழக்கச் செய்தது. இதுவரை ஒரு நீர்மூழ்கிக் கப்பலை மூழ்க வைத்துச் செயலிழக்கச் செய்த ஒரே போர்க்கப்பல் இதுதான். என்றாலும் முதலாம் உலகப் போரில் நடைபெற்ற பெரும் கடற்புறப் போர்களில் இது அதிகம் பயன்படுத்தப்படாதது பலருக்கும் ஒரு புதிராகவே இருக்கிறது. 1916-ல் இங்கிலீஷ் சேனலின் கடற்கரை கண்காணிப்புக்கு மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது. 1919-ல் காத்திருப்பில் வைக்கப்பட்டது. அதற்கு இரு வருடங்களுக்குப் பிறகு உடைக்கப்பட்டு மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது.
இதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலாம் உலகப்போர் 1914-ல் தொடங்கியது 1906 இல் உருவாக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் அப்போதே பழையதாகி விட்டிருந்தது. தவிர இந்த போர்க் கப்பல் பிரிட்டிஷ் கடற்படையின் ஒரு குறியீடாகவே கருதப்பட்டது. இதைப் போரில் ஈடுபடச் செய்து ஒருவேளை அழிக்கப்பட்டுவிட்டால் அது பிரிட்டனுக்கு இழிவு என்ற கருதப்பட்டது.
தவிரத் தொலைதூரத்திலிருந்து துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் வகையில் நவீன போர்க்கப்பல்கள் அப்போது உருவாகத் தொடங்கிவிட்டன. மேற்படி போர்க்கப்பலைப் பொறுத்தவரை எதிரி கப்பலுக்கு ஒரு அளவு அருகே சென்ற உடன்தான் அதன் மீது இதனால் குண்டு மழை பொழிய முடியும்.