அடுத்த டிஜிபியை விடுங்க.. சென்னை கமிஷனர் பதவிக்கு வரப்போவது யார் தெரியுமா? சைரன் அலறுதே!

சென்னை:
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் நிலையில், அடுத்த டிஜிபி யார் என்ற கேள்விதான் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. புதிய டிஜிபி நியமனத்தால் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பதவியும் காலியாகும் சூழல் நிலவுவதால், பல அதிரடி மாற்றங்களுக்கு காவல்துறை தயாராகி வருகிறது. இதில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக வரப்போகும் அதிகாரி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு அடுத்த சில தினங்களில் ஓய்வு பெறவுள்ளார். காவல்துறையின் உச்சபட்ச பதவியான டிஜிபி பதவியை அடைவதற்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதில் தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக (போலீஸ் கமிஷனர்) உள்ள சங்கர் ஜிவால், முன்னாள் காவல் ஆணையராக இருந்த ஏ.கே. விஸ்வநாதன், பி.கே. ரவி ஆகியோர் இடையே போட்டி நிலவி வருகிறது. இதில் சங்கர் ஜிவாலுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்படி சங்கர் ஜிவால் டிஜிபியாக பொறுப்பேற்கும் பட்சத்தில், சென்னை மாநகர காவல் ஆணையர் பதவி காலியாகும். எனவே அடுத்த சென்னை போலீஸ் கமிஷனர் ரேஸிலும் பல முக்கிய ஐபிஎஸ் தலைகள் இருக்கின்றன. இதுவரை உளவுத்துறை டிஜிபியான தேவாசீர்வாதம் தான் சென்னை கமிஷனராக வருவார் என கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்த ரேஸில் அவரது பெயர் பின்னால் சென்றுள்ளது. கள்ளச்சாராய மரணத்தில் உளவுத்துறையின் பெயர் ஏகத்துக்கும் அடிபட்டது. இதனால் தேவாசீர்வாதத்தை கமிஷனராக கொண்டு வர அரசு தரப்பு தயங்குவதாக ஒரு பேச்சு எழுந்திருக்கிறது.

இதன் காரணமாக, தற்போது போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர், தீயணைப்புத் துறை டிஜிபி ஆபாஷ் குமார் ஆகியோரே இந்த ரேஸில் முன்னிலையில் இருக்கிறார்கள். இவர்கள் இருவரில் சந்தீப்ராய் ரத்தோருக்கு முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்தினருக்கு ஆதரவு இருக்கிறதாம். அதே சமயத்தில், ஆபாஷ் குமாரை சென்னை கமிஷனர் பதவியில் அமர்த்த திமுக சீனியர் அமைச்சர்கள் சிலர் ரெக்கமண்ட் செய்து வருகிறார்களாம். இந்த ஆபாஷ் குமார் தான், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை கைது செய்த டீமுக்கு தலைமை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரில் ஒருவர்தான் அடுத்த சென்னை கமிஷனர் என்கிறார்கள் விவரமறிந்த ஐபிஎஸ் அதிகாரிகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.