சென்னை: “பாஜக என்பது வேறு, அண்ணாமலை என்பவர் வேறு. உங்களுக்குத்தான் அதிமுகவைப் பிடிக்கவில்லையே, வெளியே செல்ல வேண்டியதுதானே, உங்களை யார் இங்கு இழுத்துப் பிடித்து வைத்துள்ளது. ஏன் எங்களைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசுவதற்கு எந்த தராதரமும், யோக்கிதையும் இந்த அண்ணாமலைக்கு இல்லை. இதுவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ, ஒரு கவுன்சிலராகக்கூட பதவி வகிக்காத அண்ணாமலைக்கு எதிராக, நாங்கள் அல்ல அவர்களது கட்சியைச் சேர்ந்தவர்களே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கின்றனர்.
இந்தியாவிலேயே ஊழல் செய்ததுக்காக ஒரு கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால், அது பாஜகவின் தலைவர்தான். அதை அண்ணாமலைக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஏனென்றால், அப்போதெல்லாம் அவர் அந்த கட்சியிலேயே இல்லை. அப்போதெல்லாம் எங்காவது காவல் நிலையத்தில் மாமூல் வாங்கிக் கொண்டிருந்திருப்பார். பாஜகவின் தேசியத் தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அதிமுக உடனான கூட்டணி தொடரும் என்று கூறியபோது, அன்றைக்கு அண்ணாமலை மவுனமாக இருந்தது ஏன்? அண்ணாமலை திமுகவின் ஏஜென்டாக, திமுகவின் “பி” டீமாக அண்ணாமலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இரண்டு தினங்களுக்கு முன்னால் உதயநிதி பேசியதை வழிமொழிந்து அண்ணாமலை பேட்டிக் கொடுத்திருக்கிறார். அப்படியென்றால், திமுக என்ன சொல்கிறதோ, அண்ணாமலை அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். பாஜக என்பது வேறு, அண்ணாமலை என்பது வேறு. எனவே, அவருடைய எண்ணங்களை செயல்படுத்துவதற்கு நாங்கள் கிடையாது. எனவேதான், நான் கேட்கிறேன், உங்களுக்குத்தான் அதிமுகவைப் பிடிக்கவில்லையே, வெளியே செல்ல வேண்டியதுதானே, உங்களை யார் இங்கு இழுத்துப் பிடித்து வைத்துள்ளது. ஏன் எங்களைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறாய்?” என்று அவர் கூறினார். | வாசிக்க > அதிமுக Vs பாஜக | அண்ணாமலை வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியவில்லை: கரு.நாகராஜன்