காந்திநகர்: அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த பைபர்ஜாய் புயல், மிக தீவிர புயலாக வலுவிழந்தது. இது வரும் 14ம் தேதி காலை வரை வடக்கில் நகர்ந்து 15ம் தேதியன்று குஜராத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த 5ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவானது. இது மெல்ல வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. மேலும் வலுப்பெற்று புயலாக மாறிய நிலையில் இதற்கு ‘பைபர்ஜாய்’ என பெயரிடப்பட்டது. இந்த பிபர்ஜாய் புயலானது தீவிர புயலாகவும், அதிதீவிர புயலாகவும் மாறியது.
இது முழுக்க முழுக்க வடகிழக்கு திசையில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்தது. அதாவது, கொங்கன் – கோவா – மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளின் ஓரமாக ஒட்டி குஜராத் நோக்கி முன்னேறியது. இதன் காரணமாக கடந்த சில ஓரிரு நாட்களில், இப்பகுதிகளில் 135 முதல் 145 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. மேலும் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்தது. பொதுவாக ஒரு புயல் உருவானால் அது, தன்னை சுற்றியுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சு எடுத்துக்கொள்ளும்.
தற்போதும் இந்த பைபர்ஜாய் புயல் இதைத்தான் செய்திருக்கிறது. எனவே இதன் காரணமாக தென்மேற்கு பருவ மழையானது தள்ளி போயுள்ளது. ஏற்கெனவே கேரளாவில் பருவமழை தாமதமாக தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், புயல் இம்மழையை மேலும் தாமதமாக்கியுள்ளது.
இந்நிலையில் இந்த புயல், நாளை காலை வடக்குப்பகுதியை நோக்கி நகர்ந்து, அதன்பிறகு வடக்கு – வடகிழக்குப்பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாளான ஜூன் 15ம் தேதி நண்பகலில் மாண்ட்வி (குஜராத்)- கராச்சி (பாகிஸ்தான்) இடையே ஜக்காவ் துறைமுகம் (குஜராத்) அருகே பாகிஸ்தான் கடலோரப் பகுதியையொட்டி சௌராஷ்டிரா, கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்றும், கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 21 ஆயிரம் படகுகள் இதுவரை நிறுத்தப்பட்டுள்ளன. மாநிலப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 10 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 12 குழுக்கள் மற்றும் மூன்று கூடுதல் குழுக்கள் ஏற்கனவே குஜராத்தில் தயார் நிலையில் உள்ளன. அரக்கோணம் (தமிழ்நாடு), முண்ட்லி (ஒடிசா), பதின்டா (பஞ்சாப்) ஆகிய பகுதிகளில் தலா ஐந்து குழுக்கள் என 15 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் இந்த புயல், அதி தீவிர நிலையிலிருந்து மிக தீவிர புயலாக வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.