போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில் மாநில அரசின் முக்கிய அலுவலகங்கள் இயங்கும் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12,000 முக்கியமான அரசு ஆவணங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் காலத்தில் தவறாமல் தலைமை செயலகத்தில் தீ விபத்து நிகழ்வதும் சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான இதுவரையிலான 6 கருத்து கணிப்புகளும் பாஜக ஆட்சியை பறிகொடுக்கும் என்றே தெரிவித்துள்ளன. அத்துடன் மட்டுமல்லாமல் பாஜக 50க்கும் குறைவான இடங்களைத்தான் பெற முடியும் என இந்த கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
மத்திய பிரதேசத்தில் 2018-ம் ஆண்டு தேர்தலில் பெற்ரதை விட கூடுதல் இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ம.பி.யில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார்.
இந்நிலையில் ம.பி. மாநில முக்கிய அலுவலகங்கள் இயங்கும் கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தலைமை செயலகத்தின் 3,4,5 -வது மாடிகளில் இந்த தீ விபத்து நிகழ்ந்தது. இத்தீவிபத்தில் 12,000 அரசு ஆவணங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன. ரூ25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகிவிட்டன.
அதேநேரத்தில் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறக் கூடிய சூழ்நிலைகளில் திடீர் திடீரென முக்கிய அலுவலகங்கள் இயங்கும் கட்டிடத்தில் மட்டும் பெரும் தீ விபத்து நிகழ்வது தொடர்ந்து கொண்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2012, 2018-ம் ஆண்டுகளிலும் இதே போல தலைமை செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 2018-ல் சட்டசபை தேர்தலுக்கு சற்று முன்னதாக இதேபோல தீ விபத்து நடந்தது. அதனால் தற்போதைய தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.