இந்தியாவிலேயே டாப்.. நீட் தேர்வில் தமிழக மாணவர் பிரபஞ்சன் முதலிடம்.. ஆளப்போறான் தமிழன்!

சென்னை:
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் தேர்வான நீட் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தும் இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கொண்டே அவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை நீட் தேர்வுக்கு திமுக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்தே ஆக வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கையாக இருக்கிறது. இருந்தபோதிலும், இது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது.

இந்த சூழலில், நடப்பாண்டுக்கான இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 7-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினர்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் மற்றும் ஆந்திராவை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஆகியோர் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்தனர். அதேபோல, முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மாணவர்கள் உள்ளனர்.

இதனிடையே, நீட் தேர்வில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in, ntaresults.nic.in ஆகிய வலைதள முகவரியில் காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.